― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?ஐப்பசி பௌர்ணமி: அன்னாபிஷேகம் கண்டால் பெறும் பலன் என்ன?

ஐப்பசி பௌர்ணமி: அன்னாபிஷேகம் கண்டால் பெறும் பலன் என்ன?

- Advertisement -

நம்மை எல்லாம் படைத்து காத்துக் கொண்டிருக்கும் இறைவனுக்கு விதவிதமான அபிஷேகங்கள் அலங்காரங்கள் செய்து அழகு பார்ப்பது நமது மரபு. அதிலும் முழுநிலவு நாளில் இறைவனுக்கு மிகவும் உகந்தது. ஒவ்வொரு மாதமும் ஒரு நட்சத்திரம் பவுர்ணமியோடு சேர்ந்து வரும் தினம் விஷேசமாக கடைபிடிக்க படுகிறது. ஐப்பசி மாதம் துலா மாதம் என்று விஷேசமாக கூறப்படுகின்றது.

இந்த மாதத்தில்தான் துலா ஸ்நானம் என்ற காவேரியில் முழுகி முன்னோரை வழிபடும் சிறப்பும் இருக்கிறது. இந்த மாதத்திலே அஸ்வினி நட்சத்திரத்தோடு வரக்கூடிய பவுர்ணமி நாளில் அன்னாபிஷேகம் செய்விக்கப்படுகிறது.

இத்தகைய அன்னத்தினால் ஆன அபிஷேகம் சிவபெருமானுக்கு மட்டுமே செய்விக்கப்படுகிறது. சிவபெருமான் லிங்கத் திருமேனி உடையவர். அவருக்கு அபிஷேகம் செய்யப்படும் அன்னமும் லிங்க உருவம் உடையது. அன்னத்தால் ஆன சிவனை அன்னாபிஷேக தினத்தன்று தரிசித்து சேவிப்பது கோடி சிவனை வணங்கியதற்கு சமம் என்று புராணங்கள் கூறுகின்றன.

எவ்வளவுகொடுத்தாலும் போதாது என்று சொல்பவன் கூட போதும் என்று சொல்லக்கூடியது அன்னம். உலகில் வாழும் உயிர்களின் ஜீவநாடி அன்னம்.உலக வாழ்க்கைக்கு அச்சாணி. ஒருவேளை உணவில்லாவிட்டாலும்உடல்சோர்வடையும்; மூளை சரியாக வேலை செய்யாமல் தடுமாறும்.

“அன்னமே உண்மையான பிரம்ம சொரூபம்; விஷ்ணு சொரூபம்; சிவ சொரூபம்.ஆகையால் அன்னமே உயர்வானது’ என்று வேதம் சொல்கிறது. “அன்னம் அளி!அன்னம் அளி! ஓயாமல் அன்னம் அளி’ என்கிறது பவிஷ்ய புராணம்.

சிவன், அனைத்து உயிர்களுக்கும் வேளை தவறாமல் உணவளித்துக் காக்கும் தொழிலைச் செய்வதாகப் பார்வதி தேவி அறிகிறாள். இதனைச் சோதித்துப் பார்க்கவும் முடிவு செய்கிறாள் அன்னை.

சிறிய சம்புடம் ஒன்றுக்குள் சிற்றெறும்பு ஒன்றைப் பிடித்துப் போட்டு அழுந்த மூடி, தனது புடவைத் தலைப்பில் முடிந்து வைத்தாள் அன்னை பார்வதி. அனைவரும் உணவு உண்ணும் மதிய வேளையும் வந்துவிட்டது.

அன்னை, ஒரு புன்சிரிப்புடன் பரமனை நோக்கி அனைவரும் உணவு உண்டு விட்டார்களா என்று கேட்டாள். பரமனும், எல்லாம் சரியாக நடந்தேறிவிட்டதைக் குறிக்கும் வகையில், “ஆயிற்று” எனச் சுருக்கமாக பதில் அளித்தார்.

பார்வதி தனது தலைப்பில் முடிந்து வைத்திருந்த சம்புடத்தை எடுத்துத் திறந்து பார்த்தார். அங்கே எறும்புடன் ஓர் அரிசியும் இருந்தது. ஆனந்த அதிர்ச்சி அடைந்தார் பார்வதி.

ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகிறது. தீயில் நீரும், நீரில் நிலமும் பிறக்கின்றன. நிலத்தில் விளைந்த அரிசி, நீரில் மூழ்கி, தீயால் வெந்து அன்னமாகிறது. எனவே, அன்னம் என்பது ஐம்பெரும் பூதங்களின் சேர்க்கை. அன்னம், அபிஷேகத்தின் போது ஆண்டவனை முழுவதும் அனைத்துத் தழுவிக்கொள்கிறது. அவனிடமே அடைக்கலமாகிறது.

இதன் மூலம் ஐம்பெரும் பூதங்களும் ஆண்டவனிடம் அடைக்கலம் என்பதும், அவற்றின் உள்ளிருந்து இயங்கும் ஆண்டவனே பரம்பொருள் என்பதும் தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றன.

அறிவியல் ரீதியாகவும் அக்டோபர்மாதத்தில் தான் நிலவு பூமிக்கு மிக அருகில் வந்து தனது முழு ஒளியையும் பூமியை நோக்கி வீசுகிறது என்கிறது வானவியல். நவகிரகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி இதை உணர்ந்த நமது ரிஷிகள் அந்த மாதத்தில் அன்னாபிஷேகம் சிறப்பு என கண்டறிந்து அதனை நடைமுறைப்படுத்தினார்கள்.

ஒரு வீட்டிற்கு விருந்துக்குப் போய், அங்கேயே டேரா போட்டு விடுபவர்களைப் பார்த்து உனக்கு சோறு கண்ட இடம் சொர்க்கமாயிற்றே என்று வேடிக்கையாக சொல்வது வழக்கம். உண்மையில் இந்த பழமொழி ஏன் வந்தது தெரியுமா?

சிவலிங்கத்துக்கு ஐப்பசி பவுர்ணமியன்று வெள்ளை அன்னத்தால் அபிஷேகம் செய்வர். இந்த அபிஷேகத்தைக் காண்பவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் தான் சோறு கண்ட இடம் சொர்க்கம் என்றார்கள். பிற்காலத்தில், இந்த சுலவடையை, நீண்டநாள் தங்கும் விருந்தாளிகளைக் கேலி செய்வதற்கு பயன்படுத்தி விட்டார்கள்

ஐப்பசி பௌர்ணமி நாளன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் எனப்படும் சிறப்பு வழிபாடு லிங்க மூர்த்திக்கு நடத்தப்படுகிறது. அனைத்து உயிர்களுக்கும் அன்னமான உணவை அளித்துப் பாதுகாக்கும் சிவபெருமானுக்கு சுத்த அன்னத்தைக் கொண்டு முழுக்காட்டுவது இந்த நாளின் சிறப்பாகும்.

இனிப்பு, காய்கறி மற்றும் பழங்களுடன் செய்யப்படும் சுத்த அன்னாபிஷேகக் காட்சி, ஆலயத்துக்கு வழிபட வரும் பக்தர்களை பரவசத்துக்குள்ளாக்குகிறது. இந்த அன்னாபிஷேக நாளன்று சிவாலயங்களில் கருவறையிலுள்ள சிவபெருமானுக்கு அபிஷேக ஆராதனை முடிந்த பின்னர், சமைத்த சுத்த அன்னத்தைக் கொண்டு திருமுழுக்காட்டப்படுகிறது.

லிங்கத் திருமேனி மறையுமளவுக்கு அன்னம் குவிக்கப்பட்டு, இனிப்புகள், பழங்கள் நிவேதனதுக்கு வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெறுகின்றன

“உலகில் வாழும் மானிடர்களுக்கு மட்டுமல்ல; இவ்வுலக வாழ்வை நீத்தவர்களுக்கும் பிண்டமாக அன்னம் அளிக்கப்படுகிறது’ என்று வேதநூல்கள் கூறுகின்றன.

இதனையெல்லாம் நினைவு கூர்ந்துதான் துலா மாதமான ஐப்பசி மாதப் பௌர்ணமியன்று, சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்யப் படுகிறது.

சிவலிங்கத்தில் காணப்படும் அன்னத்தின் ஒவ்வொரு பருக்கையும் சிவலிங்கத்தின் உருப்பெறும். அதாவது சிவரூபமாகும். இதனை தரிசிப்பவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் அன்னத்திற்குப் பஞ்சமில்லை என்பது ஐதீகம்.

ஒருமுறை தேவர்களுக்கு கடும் பசிப்பிணி வந்தபோது இறைவனே அன்னமாகிவிட்டார் என்றும், இந்த நிகழ்வு ஐப்பசி பௌர்ணமியில் நடந்தது என்றும் கூறப்படுகிறது. மேலும், தேவியானவள் பல்வேறு கட்டங்களில் அசுரர்களை வதம்செய்து தேவர்களையும் மானிடர் களையும் காப்பாற்றினாள். அசுர வதத்தால் தேவிக்கு பல தோஷங்கள் ஏற்பட்டன. இதனை நிவர்த்திக்க இறைவனிடம் வேண்டினாள். தேவியின் வேண்டுதலை ஏற்றார் இறைவன்.

தேவியால் வதம்செய்யப்பட்ட அசுரர்கள் அட்சய லோகம் என்னும் இடத்தில் பிண்டத்துக்காக அலைந்து அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களைச் சார்ந்தவர் கள், தேவியால் தண்டிக்கப்படுவோம் என்ற அச்சத்தில் இறந்த அசுரர்களுக்காக நீத்தார் கடன் செய்ய முன்வரவில்லை. எனவே சிவபெருமானே அன்னமாக மாறி வதம்செய்யப்பட்ட அசுரர்களைத் திருப்திப்படுத்தினார். அதனால்தான் அன்னாபிஷேகத்தன்று அன்னத்துடன் அப்பம், வடை, புடலங்காய் முதலிய காய்கறிகளும் சில சிவாலயங்களில் படைக்கப்படுகின்றன.

சிவபெருமானுக்கு செய்யப்படும் அன்னாபிஷேகத்தால் நாட்டில் பசி, பஞ்சம், பட்டினி இராது. ஆகம விதிப்படி அன்னாபிஷேகம் செய்வித்தால் நாட்டில் காலாகாலத்தில் மழைபொழிந்து வளங்கள் பெருகும்.

பொதுவாக பௌர்ணமியன்று சந்திரன் பதினாறு கலைகளுடன் முழுமையாகப் பிரகாசிக்கிறான். அன்று சந்திரனது கலை, அமிர்தகலையாகும். அதுவும் ஐப்பசி பௌர்ணமி சிவபெருமானுக்கு உகந்த நாளாகக் கருதப்படுவதால், இந்நாள் சிறப் பிக்கப்படுகிறது.

சிவன் பிரம்மரூபி. அவரது மெய்யடி யார்கள் பிரதிபிம்பரூபிகள். பிரம்மம் திருப்தியடைந்தால் பிரதிபிம்பமும் திருப்தியடையும்.
தானத்தில் சிறந்ததாக அன்னதானம் சொல்லப்படுகிறது.

இறைவனுக்கும் அன்னத்தால் ஆன அபிஷேகம் பிரியமானதாக இருக்கின்றது. பிணியில் பெரியது பசி! அந்த பசிப்பிணி போக்குவது அன்னம். இந்த அன்னத்தை இறைவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு இல்லாதார்க்கு அன்னதானம் செய்து இந்த நாளில் வழிபடுவது சிறப்பாகும்.

ஐப்பசி பவுர்ணமியன்று, உச்சிக்கால பூஜையின் போது இந்த அபிஷேகத்தை நடத்துவது மரபாக உள்ளது. அன்னத்தை தெய்வம் என்பார்கள். சிதம்பரம் தில்லைச் சிற்றம்பலத்தில் ஸ்படிகலிங்கத்துக்குத் தினமும் அன்ன அபிஷேகம் நடைபெறுகிறது. இதனாலேயே சிதம்பரத்திற்கு அன்ன க்ஷத்திரம் என்ற பெயரும் உண்டு. இதே போல் அனைத்து சிவ ஆலயங்களிலும் தினமும் அன்ன அபிஷேகம் செய்து நம் ஊர்களை எல்லாம் வளமுள்ளதாக்குவோம்.

நமக்கு அன்னமூட்டும் தாயாக விளங்குபவள் அன்னபூரணி. காசியில் இருக்கும் இவளது கையில் பால் அன்னம் நிறைந்த பாத்திரமும், கரண்டியும் இருக்கும். தம்மை நாடிவருவோருக்கு வயிற்றுப்பசியை மட்டுமல்லாமல் ஆன்மபசியையும் போக்கி அருள்கிறாள். திருமூலர் திருமந்திரத்தில் அன்பே சிவம் என்று குறிப்பிடுகிறார். அறிவான தெய்வமே என்று இறைவனை தாயுமானவர் அழைக்கிறார். இந்த அன்பையும், அறிவையும் நமக்குத் தருபவள் அன்னபூரணி.

சக மனிதனின் பசியைப் போக்குபவன் கடவுளின் தயவைப் பூரணமாகப் பெறும் தகுதி பெறுகிறான். பசி என்னும் கொடுமை ஏழைகளின் மீது பாய்ந்து கொல்லும் தருணத்தில், உணவிட்டுக் காப்பதே ஜீவகாருண்யமாகும். அன்னதானம் இடுபவரை வெயில் வருத்தாது. வறுமை தீண்டாது. இறையருள் எப்போதும் துணை நிற்கும். மனதில் மகிழ்ச்சி நிலையாக குடிகொண்டிருக்கும்.

அபிஷேகப் பிரியரான சிவபெருமான், அபிஷேக நேரங்களில் பல்வேறு திரவியங்களால் திருமுழுக்காட்டு செய்விக்கப் பெறுகிறார். பின்னரும் லிங்கத் திருமேனியின் மேலே தாரா பாத்திரம் எனப்படும் செம்புப் பாத்திரத்தில் நீர் நிறைத்து, சொட்டு சொட்டாக லிங்கத் திருமேனியின்மீது அபிஷேகிக்கப்படும் தாரை அமைப்பை பல ஆலயங்களிலும்- குறிப்பாக வடமாநிலங்களில் நாம் காணமுடியும். இந்த அபிஷேக வரிசையில், ஐப்பசி பௌர்ணமி நாளன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் எனப்படும் சிறப்பு வழிபாடு லிங்க மூர்த்திக்கு நடத்தப்படுகிறது.

இந்த கங்கை கொண்ட சோழபுரம் ஆலயத்தில் நடைபெறும் அன்னாபிஷேகப் பெருவிழா தமிழகத்தில் நடைபெறும் ஒரு முக்கிய திருவிழா ஆகும். சுமார் பதின்மூன்றரை அடி உயரமும் அறுபது அடி சுற்றளவும் கொண்ட இந்த சிவலிங்கத் திருமேனிக்கு, 108 மூட்டை அரிசி அன்னமாக சமைக்கப்பட்டு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் இறைவனுக்குப் படைக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

கங்கை கொண்ட சோழபுரத்தைச் சுற்றியுள்ள கிராமங்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் கூடி அன்னாபிஷேகத்தை தரிசித்து மகிழ்கின்றனர்.

இந்த அன்னாபிஷேக நாளன்று இறைவனைத் தரிசித்து பிரசாதத்தை உட்கொள்வதை பெரும்பேறாக பக்தர்கள் கருதுவதுடன், வரும்காலங்களில் வாழ்வில் பஞ்சமே இராது என்றும் நம்புகின்றனர். அத்துடன் அபிஷேக அன்னத்தை எறும்பு, கால்நடை, பறவை உள்ளிட்ட எல்லா உயிர்களுக்கும் அளிப்பர்.

இந்த அன்னத்தை பிரசாதமாக வாங்கி உட்கொள்பவர்களுக்கு நோய் நொடி அண்டாது.தீர்க்க ஆயுசு உண்டாகும். மக்கட்பேறு பெறுவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version