
தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட இளைஞர்களுக்கு அதிகளவில் வாய்ப்பு தர வேண்டும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கோரிக்கை விடுத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மல்லி என்ற இடத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற அமைச்சார் ராஜேந்திரபாலாஜி இதனைக் கூறினார்.
ராஜேந்திரபாலாஜியின் இந்தக் கருத்து அதிமுகவில் உள்ள இளைஞர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு இன்னும் வராத நிலையில், அதிமுக சார்பில் மாவட்டம் தோறும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிப்புத்தூர் பகுதியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களில் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான ராஜேந்திரபாலாஜி கலந்துகொண்டார்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவில் அதிகளவில் இளைஞர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், இளைஞர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் எனவும் கட்சித் தலைமைக்கு கோரிக்கை விடுத்து பேசினார்.
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று இருந்த இளைஞர்கள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் இந்தக் கருத்தை பலத்த கைதட்டலுடன் வரவேற்றனர்.
அண்மைக்காலமாக அதிமுகவில் சேருவதற்கு இளைஞர்கள் பெருமளவில் ஆர்வம் காட்டாத நிலையே உள்ளது.
இந்த சூழலில் ராஜேந்திரபாலாஜியின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதனிடையே மற்ற மாவட்டங்களில் எப்படியோ, ஆனால் விருதுநகர் மாவட்டத்தில் புது முகங்களையும், இளைஞர்களையும் உள்ளாட்சித் தேர்தலில் களம் இறக்க உள்ளாராம் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.
இதனால் அந்த மாவட்டத்தில் உள்ள அதிமுக இளைஞர்கள் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுவதாக கூறப்படுகிறது.