தவறான கேள்விக்கு மதிப்பெண் அதிகமாக வழங்கிய பேராசிரியருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை

புதுவை என்ஜினீயரிங் கல்லூரியில் கடந்த 2007–ம் ஆண்டு படித்த மாணவர்கள் அகிலன், பெருமாள். கடந்த 2007–ம் ஆண்டு நவம்பர்–டிசம்பர் மாதம் நடந்த தேர்வில் இந்த மாணவர்களுக்கு அவர்கள் பெற்ற மதிப்பெண்ணை விட அதிக மதிப்பெண் வழங்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்கலைக்கழக பேராசிரியர் பிரபாகரன் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கி இருப்பது தெரிய வந்தது. தேர்வில் 24 மதிப்பெண் எடுத்த அகிலனுக்கு 48 மதிப்பெண்ணும், 22 மதிப்பெண் பெற்ற பெருமாளுக்கு 42 மதிப்பெண்ணும் வழங்கியது தெரிய வந்தது. அதோடு மாணவர்கள் கேள்விக்கு தவறான பதில் எழுதியிருந்ததும் அதற்கு மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் தனித்தனியாக 2 வழக்கு பதிவு செய்து பேராசிரியர் பிரபாகரன், மாணவர்கள் அகிலன், பெருமாள் ஆகியோரை கைது செய்தனர். புதுவை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. தீர்ப்பில் நீதிபதி வேல்முருகன் பேராசிரியர் பிரபாகரனுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்தார். மாணவர்கள் அகிலன், பெருமாள் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.