
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5%இட ஒதுக்கீடு விரைவில் ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு தேசிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்திருக்கிறது.
தேசிய ஆசிரியர் சங்கம் (தமிழ்நாடு) சார்பில் அதன் மாநில பொதுச் செயலாளர் மு.கந்தசாமி தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பி உள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது…
ஆசிரியர் பணி அறப்பணி; அதற்கே உன்னை அர்ப்பணி என்ற கொள்கையோடு தேசிய சிந்தனை உள்ள ஆசிரியர்களை உறுப்பினர்களாகக் கொண்டது நமது தேசிய ஆசிரியர் சங்கம்.
எனவே மாணவர்களின் உயர்கல்வியில் முக்கியமானதாக விளங்கும் மருத்துவப் படிப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் சங்கம் திண்ணமாக உள்ளது.
அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை எளிய பின்தங்கிய மாணவர்களின் மருத்துவப் படிப்பை உறுதி செய்யும் வகையில் மாண்புமிகு தமிழக முதல்வர், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோர்களால் முன்மொழியப்பட்டு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு மருத்துவக் கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா தங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது
இந்த மசோதா மீது தங்களின் மேலான ஒப்புதலை மிக விரைவில் வழங்கி தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கனவை நனவாக்க வேண்டும் என தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகிறேன்… என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.