
கட்டுரை / புகைப்படம்: ஜெயஸ்ரீ. எம்.சாரி, நாக்பூர்
“கிராமப்புற குழந்தைகளுக்கு அவர்களின் திறமைகளுக்கு ஏற்றவாறு பலவித கலைகளை பயிற்றுவிப்பதில் இருக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி அலாதியானது,” என்கிறார் புகழ்பெற்ற சிற்பக்கலைஞரும், காந்தியவாதியான ஜலந்தர் நாத்.
தற்போது பாபு குடி என்றழைக்கப்படும் சேவாக்ராம் ஆசிரமத்தில் சேவாக்ராம் மற்றும் சுற்றுப்புறத்தில் இருக்கும் சிறுவர், சிறுமிகளுக்கு பலவித இசைக்கருவிகள், ஓவியம் போன்ற பலவகையான கலைகளை கற்று கொடுத்து கொண்டு இருக்கிறார், ஜலந்தர் நாத்.
மஹாராஷ்டிர மாநிலத்தில் சந்திரப்பூர் மாவட்டத்தில் நாக்பீட் என்னும் இடத்தில் பிறந்த ஜலந்தர் நாத்,
மகாத்மா காந்தியடிகள், ஆசார்ய விநோபா பாவே, ஜெய்பிரகாஷ் நாராயண் முதலியோரின் கொள்கைகளினால் ஈர்க்கப்பட்டு தனது
19 வயதிலிருந்து சேவாக்ரம் ஆசிரத்துடன் தொடர்பில் இருந்து கொண்டிருக்கிறார்.
கௌதம புத்தர், காந்தியடிகள், வினோபா பாவே போன்ற தலைவர்களின் கொள்கைகளை தன் அமைதிப் பயணம் மூலமாக இந்தியாவின் பல பகுதிகளிலும் பல நாடுகளில் தன் நண்பர்கள் குழுவுடன் பரப்புகிறார். குறிப்பாக ஆப்பிரிக்கா, சுவிட்ஸர்லாந்த் போன்ற நாடுகளில் அவர்களின் அமைதிப் பயணத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாக சொல்கிறார், ஜலந்தர் நாத்.
தற்போது சேவாக்ரம் ஆசிரமத்தில் தங்கியுள்ள ஜலந்தர் நாத் சிறுவர்களுக்கு ஓவியம், வயலின், ஹார்மோனியம், கிடார், புல்லாங்குழல் கற்று கொடுக்கிறார். கிராமப்புற குழந்தைகள் மகிழ்ச்சியுடன் பயில வருவதாக கூறுகிறார்.
பெற்றோர்களும் குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்பின் இடையிலே அருமையான அனுபவமாய் இருக்கிறது, என்கின்றனர். பசுமையான, அமைதியான, மாசுபாடற்ற சூழ்நிலையில், பறவைகளின் ஒலியுடனும், ஜலந்தர் நாத் அவர்களின் கற்பிக்கும் முறை பாபு குடிக்கு வரும் பார்வையாளர்களுக்கு ஒரு அருமையான அனுபவமாய் உள்ளது.