
சனாதன தர்மத்தில் பெண்கள் என்பது குறித்த தொல்.திருமாவளவன் எம்.பி.,யின் கொச்சையான விமர்சனத்தை அடுத்து நாடெங்கும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு எதிர்ப்புகள் வலுத்து உள்ள நிலையில் பல்வேறு இடங்களிலும் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன இதையடுத்து திருமாவளவன் மீது 6 பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
இந்நிலையில் திருமாவளவன் கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் தமிழக அமைச்சர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

மதம் சார்ந்த கருத்துகளில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் பெரும்பான்மையோரின் நம்பிக்கை குறித்த விஷயங்களை பேசும்போது கவனமாக இருக்க வேண்டும் என அமைச்சர் சி.வி. சண்முகம் கூறினார்.
விழுப்புரத்தில் விவசாயிகளுக்கு 32 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பீட்டிலான டிராக்டர், நடவு செய்யும் இயந்திரம், கலப்பை ஆகியவைகளை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் சி.வி. சண்முகம் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், தமிழகத்தில் பிற மதத்தினரை கொச்சைப்படுத்தும் கலாச்சாரம் பெருகி வருவதாக கூறினார்.

அடுத்து, அமைச்சர் ஜெயக்குமார் கூறிய போது, பெண்மையை போற்ற வேண்டுமே தவிர, தூற்றக்கூடாது என்றார். மேலும், பெண்மை தொடர்பான திருமாவளவனின் கருத்துகள் கண்டிக்கத்தக்கவை என்றார்.
சென்னை சைதாப்பேட்டை மீன்வளத்துறை அலுவலகத்தில் கடல் மீன்பிடி சட்ட அமலாக்க பிரிவின் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் கண்காட்சியை திறந்து வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், புகார்கள் அடிப்படையில்தான் திருமாவளவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்றார்.