
தேர் வராத தேரடிவீதியை இதுவரை திருவண்ணாமலை பார்த்ததில்லை . இன்று பார்க்க நேரிட்டது .
ஏழாம் நாள் திருவிழா என்றால் திருவண்ணாமலை எப்படி இருந்திருக்கும்?? திரும்பும் சாலைகள் தோறும் வாகனங்களின் அணிவகுப்பு . கடுமையான போக்குவரத்து நெரிச்சல் நகருக்கு வெளியே . நகருக்கு உள்ளே சாரை சாரையாக மக்கள் அண்ணாமலையார் கோயிலை நோக்கி நடக்க தொடங்கி இருப்பார்கள் .
கால் வைக்க இடமில்லாமல் மாடவீதி மனிதர்களால் நிறைந்திருக்கும் . எங்கு திரும்பினாலும் கடைகள் ..சிறு சிறு வியாபாரிகள் தேடி வந்து கடை போட்டு பல நாட்கள் வியாபாரத்தை ஒருநாள் செய்து சம்பாதிப்பார்கள் .
சுற்றும் முற்றும் கிராமங்களில் இருந்து பெரிய தேரின் பேரழகு தரிசனத்தை பார்க்க வந்து சேர்வார்கள் . எத்தனையோ மாநிலங்களை கடந்து வந்து தேரின் வடம் பிடிக்க இரவு முதல் காத்திருப்பார்கள் வெளியூர் அண்ணாமலையார் பக்தர்கள் .
மரத்தேர் என்றும் கட்டைத்தேர் என்றும் பெரிய தேர் என்றும் மக்கள் மனதில் என்றென்றும் நீங்கா இடம் பிடித்த அண்ணாமலையார் தேர் மாடவீதியில் வலம் வராத நாள் இன்று . தேர் வராத மாடவீதியை இன்று பார்த்தது போல இனியும் நாங்கள் பார்க்க விரும்பவில்லை இறைவா . இப்படி நடப்பது இதுவே கடைசியாக இருக்கட்டும் திருவண்ணாமலையில் என்று கூறுகின்றனர்… திருவண்ணாமலை பக்தர்கள்!
முன்னதாக, நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆறாம் நாள் தீப திருவிழாவில், கொட்டும் மழையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று ஆறாம் நாள் திருவிழாவில் அதிகாலை அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, விநாயகர் மற்றும் சந்திரசேகரர் கொட்டும் மழையில், ஐந்தாம் பிராகார வலம் வந்தனர். அப்போது பக்தர்கள் மழையைப் பொருட்படுத்தாமல் சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து இரவு, பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனியாக ஐந்தாம் பிராகாரத்தில் உலா வந்தனர்.
வழக்கமாக ஆண்டுதோறும், ஆறாம் நாள் விழாவில் வெள்ளி ரதத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் வீதி உலா வருவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனாவால் வெள்ளி ரதத்தில், சுவாமி வீதி உலா வருவதும் ரத்து செய்யப்பட்டது.
- செய்தி: எஸ்.ஆர்.வி.பாலாஜி, திருவண்ணாமலை