― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?தீபம் ஏற்றும் மூங்கிலுடன் ஊர்வலம் வந்த பர்வதராஜகுல மரபினர்!

தீபம் ஏற்றும் மூங்கிலுடன் ஊர்வலம் வந்த பர்வதராஜகுல மரபினர்!

- Advertisement -
thiruvannamalai-moongil-urvalam1

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய அம்சமான மகாதீபம் ஏற்றும் உரிமை பெற்றுள்ள பர்வதராஜகுல மரபினர், தங்கள் குலதெய்வமான திருவண்ணாமலை அங்காளம்மன் ஆலயத்தில் தீபம் ஏற்றும் மூங்கிலை பூஜை செய்து ஊர்வலமாகக் கொன்டு சென்றனர்.

மூங்கிலில் காடா துணிகளைச் சுற்றி, நெய்யில் தடவி, மகா தீபம் ஏற்றப்படுவதற்கு முன் மாலை 5.45க்கு அதனைப் பற்ற வைத்து, நெய் கொப்பரையில் மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றுவார்கள்!

thiruvannamalai-moongil-urvalam2

அண்ணாமலை ஜோதியை தரிசிப்பவர்கள் புண்ணியம் செய்தவர்கள் என்றால், இந்த தீபத்தை ஏற்றும் உரிமை பெற்று அச்சடங்கினைச் செய்பவர்கள் எத்தகைய மகா புண்ணியம் செய்தவர்கள்?!

இவ்வாறு மகா ஜோதியை ஏற்றும் உரிமை பெற்றவர்கள்பருவத ராஜகுல மரபினர்!. திருவண்ணாமலையில் கார்த்திகையில் நடைபெறும் தீபத்திருவிழாவின் நிறைவாக, அண்ணாமலை மீது மகாதீபம் ஏற்றும் உரிமையைப் பெற்று அப்பணியைத் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார்கள். திருவண்ணாமலை நகரில் மட்டும் இந்த மரபினரின் சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன.

அவர்களில் ஐந்து வம்சாவளிகளாக உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், மலை மீது தீபம் ஏற்றும் உரிமையை நிறைவேற்றுகின்றனர்.

பர்வத ராஜகுல வம்சத்தின் வழிவந்த, பர்வதராஜனின் அருந்தவப் புதல்வியாக அவதரித்தார் பார்வதி தேவி. பார்வதி தேவியார் அவதரித்த மரபைச் சேர்ந்தவர்கள்தான், தொன்றுதொட்டு திருவண்ணாமலை மலைஉச்சியில் மகா தீபம் ஏற்றும் திருப்பணியை நிறைவேற்றி வருகின்றனர்.

இறை ஜோதியை ஏற்றும் உரிமை பருவத ராஜகுலத்தினருக்கு எப்படி கிடைத்தது?

முன்பொரு காலத்தில், பிரம்ம ரிஷிகளின் தியானத்தை கலைக்கும் வேலையில் அசுரர்கள் ஈடுபட்டனர். பிரம்ம ரிஷிகள் கோபப்பட்டால் அசுரர்கள் மீன் உருக் கொண்டு, கடலுக்குள் மறைந்து கொள்வார்கள்.

இதனால் சோர்வுற்ற ரிஷிகள், அசுரர்களை அழித்து, தம் தவம் சிறக்கச் செய்யுமாறு சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களுக்காக பர்வத ராஜனை அழைத்த சிவபெருமான், கடலுக்குள் மீன் வடிவில் மறைந்துள்ள அசுரர்களை அழிக்குமாறு கட்டளையிட்டார்.

thiruvannamalai-moongil-urvalam3

அதற்கு உதவியாக ஞான வலையையும், தேவதச்சனான விஸ்வகர்மா உருவாக்கிய செம்பொன் படகையும் அளித்தார். கடலுக்குள் சென்ற பர்வதராஜன், மீன் வடிவிலான அசுரர்களை பிடித்து கரையில் போட்டார். ஆனால் அசுரர்கள் மீண்டும் மீண்டும் கடலுக்குள் துள்ளிக் குதித்து மறைந்தனர்.

சோர்வடைந்த பர்வதராஜா, மகள் பார்வதியிடம் உதவி கேட்க, பார்வதிதேவியும் கடல் நடுவே அகோர உருவில் வாய் திறந்து நின்றுகொண்டு, மீன்களை எல்லாம் விழுங்கி அழித்தார். எதிர்பாராத விதமாக, அசுரர்களுக்கு விரித்த வலையில் கடலுக்கு அடியில் தவம் புரிந்த மீன மகரிஷியும் சிக்கி கரைக்கு வந்தார்.

தவம் கலைந்த கோபத்தில், ‘‘உமது ராஜவம்சம் அழிந்து மீன் பிடித்துதான் வாழ வேண்டும்” என்று பர்வதராஜாவுக்கு சாபமிட்டார்.

இதனால் அதிர்ந்த பர்வத ராஜா, சிவபெருமானிடம் சென்று முறையிட்டார். கருணை கொண்ட சிவன், கார்த்திகை நாளில் திருவண்ணாமலையில் ஜோதிப் பிழம்பாகக் காட்சி தருவேன், அந்த ஜோதியை ஏற்றும் பணியை பர்வதராஜ வம்சத்தினர் நிறைவேற்றுவர். அதன்மூலம் இந்த வம்சம் தழைக்கும் என்று ஆசி அளித்தார்.

அதன் பின்னர் இந்தப் பணியை விடாது இந்த வம்சத்தினர் செய்து வருகின்றனராம்.

  • எஸ்.ஆர்.வி. பாலாஜி, திருவண்ணாமலை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version