– லாஸ்ஏஞ்சல்ஸ் ராம்
200 ப்ளஸ் வருஷங்கள் தாண்டிய அமெரிக்க ஜனநாயகத்திற்கு இன்று ஒரு கருப்பு தினம்!
உலகளாவிய ஜனநாயக பாதுகாவலன், ஏழை மற்றும் எளிய புலம்பெயர் மக்களின் பங்காளி என்றெல்லாம் இடையறாமல் தன்னைத்தானே விளம்பரம் செய்து கொண்டு, உலகின் எந்த நாட்டில், எங்கே தேர்தல்கள் நடந்தாலும் தம்மைத்தாமே அதன் கண்காளிப்பாளர்களாகவும், பெரியண்ணனாகவும், பேட்டை தாதாவாகவும், ஏன் பஞ்சாயத்து ரவுடியாகவுமே நிலைநாட்டிக் கொண்டு “டாய்! இது சரியில்ல, அது சரியில்ல” என்று சதா மிரட்டிக் கொண்டிருந்த அமெரிக்க ஜனநாயகத்திற்கு அதன் அதிபர் ட்ரம்பே இன்று செம்புள்ளி கரும்புள்ளி குத்திக் கழுதை மேலேற்றி, சர்வதேச அரங்கில் மானத்தை வாங்கிய நாள்.
சமீபத்திய 2020 அதிபர் தேர்தலில் சட்டபூர்வமாகவும் பெரும்பாலோனார் விருப்பப்படியும் ஜோ பைடன் வெற்றி பெற்றதை ஆரம்ப முதலே எள்ளி நகையாடிய ட்ரம்ப், தன் பதவிக்குரிய மரியாதையை மறந்து, தன் சுயநலத்தை மட்டுமே மேற்கொண்டு, அந்தத் தேர்தலையே மதிக்காமல் எள்ளி நகையாடினார், அசிங்கப் படுத்தினார், தொடர்ந்து இன்றுவரை அபத்தமாக உளறிக் கொண்டிருக்கிறார் என்பது உலக முழுவதும் தெரிந்ததே.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் விதிமுறைகள் விநோதமானவை. இந்தியா மாதிரி இங்கே ஒரு நாடு தழுவிய தேர்தல் கமிஷன் என்பது கிடையாது. ஒவ்வொரு மாநிலமும் தனித்தனியே தன் ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை அறிவிக்கும். பின்னர் எல்லவற்றையும் கூட்டிக் கழித்து, 50 மாநிலங்களில் அதிகமான வோட்டுகள் வாங்கியவர், எலெக்ட்ரல் காலேஜால் முடிவு செய்யப்படுபவரே ஜனாதிபதி என்று அறிவிக்கப்படுவார்.
எல்லாவிதமான தேர்தல் நடைமுறைகளிலும் அதிபர் வெற்றி பெற்று விட்டார் என்பதை, ஆரம்ப முதலே மறுத்துவந்த முட்டாள் ட்ரம்ப், தன் அடியார் பொடியார் திருக்கூட்டத்தை வைத்து பைடனைக் கிண்டல் செய்து கொண்டிருந்தது செய்தி. நீங்களும் படித்து ஆச்சரியப் பட்டிருப்பீர்கள்.
2021, ஜனவரி 6ம் தேதி! இன்று, அமெரிக்க பார்லிமெண்டில் பைடனின் வெற்றி உறுதிபடும் நாள், வெற்றி பெற்றது பைடன் தான் என்று சட்டப்படி இறுதியாகும் நாள். அதை ‘எப்படியாவது’ தவிடு பொடியாக்கும் அசிங்க நோக்கத்தில் ட்ரம்ப் தன் அடியாட்களை ஏவி விட்டு, அமெரிக்க பார்லிமெண்டைத் தாக்கி – ஆமாம், காங்கிரஸை, கேபிடல் ஹில் எனப்படும் அமெரிக்க ஜனநாயக புனித பீடத்தையே தாக்கி, ட்ரம்பின் அடியாட்கள் பலவித ஆயுதங்களுடன் தான் வாஷிங்டனுக்கு வந்தார்கள் – பார்லிமென்டில் இருந்தவர்களைச் சிறை பிடிக்க நினைத்து, அங்கே கூட்டம் கூட்டமாக உள்ளே புகுந்து, ஆர்ப்பாட்டம் செய்து, ஃபர்னிச்சரை எல்லாம் உடைத்து, ஆபீஸ்களைக் கபளீகரம் செய்து வெறியாட்டம் போட்ட கருப்பு நாள்.
பார்லிமெண்ட் கட்டிடத்திற்குள்ளேயே ஒரு அமெரிக்கத் தீவிரவாதியை அமெரிக்கப் போலீஸே சுட்டு வீழ்த்திய நாள்.
ஏற்கனவே இன்று ஜியார்ஜியாவில் நடந்த இரண்டு செனட் இடைத் தேர்தல்களிலும் மண்ணைக் கவ்விய ட்ரம்பின் குடியரசுக் கட்சி, செனட்டில் மெஜாரிட்டி நிலையை இழந்ததும் இன்று தான்.
இதன் மூலம் பைடனின் ஜனநாயகக் கட்சி அமெரிக்க பார்லிமென்டின் இரண்டு சபைகளிலும், House and Senate, அறுதிப் பெரும்பான்மை பெருகிறது.
ஏற்கனவே தோல்வியாலும் அவமானத்தாலும் அசிங்கப்பட்டிருந்த ட்ரம்பிற்கு இது மேலுமொரு சாவுமணிச் செய்தியானது. அவருடைய வெறியாட்டம் விண்ணை முட்டி, அமெரிக்க பார்லிமென்டில் மலை ஏறியது.
ட்ரம்ப் ஏன் இப்படி காட்டுத்தனமாக, அறிவில்லாமல் நடந்து கொள்கிறார்?
இனிமேலாவது அமெரிக்கா, அகில உலகத்திற்கும் ஜனநாயகத் தேர்தல்கள் பற்றி, நல்லது கெட்டது பற்றி, சாங்கோபாங்கமாக வியாக்கியானம் செய்வது பற்றி, அப்சர்வர்கள் அனுப்பிக் கண்காணிப்பது, பாடம் எடுப்பது பற்றி யோசித்து, அதைக் கை விடலாம்.