
இன்று தை அமாவாசை. இதனை முன்னிட்டு, ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் ஏராளமான ஹிந்துக்கள் புனித நீராடினர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு, அதிகாலை 2:30 மணி அளவில் கோயில் நடை திறக்கப் பட்டது. அதிகாலை 3:30 முதல் 4:30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெற்றது. தொடர்ந்து காலை 7:00 மணிக்கு கோயிலில் இருந்து ராமர், சீதை, லட்சுமணர், பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடு நடைபெற்றது. தெய்வ மூர்த்தங்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளினர்.
ராமருக்கு தீபாராதனை நடந்ததும் தீர்த்தவாரி நடைபெற்றது. தொடர்ந்து முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டிய பக்தர்கள் திதி பூஜை, தர்ப்பணம் செய்து அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடினர்.
இன்று பக்தர்கள் வசதிக்காக பகல் முழுவதும் கோயில் திறந்திருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இரவு ராமரின் வெள்ளி ரத வீதி உலா நடைபெறுகிறது. கோவில் நடை இரவு 9 மணி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமேசுவரம் கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அக்னிதீர்த்த கடல் மற்றும் 22 தீர்த்தங்களில் புனித நீராடுவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் கடந்த ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி மாத மகாளய அமாவாசை நாட்களில் ராமேஸ்வரம் கோவிலுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது, கோயிலில் வழிபட இருந்த தடை விலக்கப்பட்டதால் ஏராளமானோர் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்து புனித நீராடி தரிசனம் செய்து வருகின்றனர்.
வேதாரண்யம்…
நாகை மாவட்டம் வேதாரண்யம், கோடியக்கரை கடலில் தை அமாவாசையை முன்னிட்டு, மக்கள் புனித நீராடி வருகின்றனர்.
வேதாரண்யம் மற்றும் ஆதி சேது எனப்படும் கோடியக்கரை கடல் பகுதியில் ஆண்டுதோறும் தை, ஆடி அமாவாசை, அர்தோதயம், மஹோதய அமாவாசை நாள்களில் புனித நீராடும் பக்தர்கள், முன்னோர் வழிபாடுகளை மேற்கொள்வது வழக்கம்.
தற்போது, கொரோனா கால தடைகள் விலக்கப் பட்டு, பக்தர்கள் தை அமாவாசை நாளில் சில கட்டுப்பாடுகளுடன் நீராட அனுமதிக்கப்பட்டதை அடுத்து, ஏராளமான ஹிந்துக்கள் வேதாரண்யம் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.
அன்பர்களின் வசதிக்காக, வேதாரண்யம், கோடியக்கரைக்கு சிறப்பு அரசுப் பேருந்துகள் இயக்கப் பட்டு வருகின்றன.
இது போல் கடற்கரைத் தலமான திருச்செந்தூர், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள புனிதத் தலங்களான திருக்குற்றாலம், பாபநாசம் உள்ளிட்ட இடங்களிலும் பக்தர்கள் இந்த முறை அனுமதிக்கப் பட்டுள்ளனர். இருப்பினும், வழக்கமான அளவில் பக்தர்கள் இன்றிக் காணப் படுகிறது,.