இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களுக்கான விருதுக்கு புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி கவர்னர் மாளிகை தரப்பில் வெளியான செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அமெரிக்க நாட்டிலுள்ள பல்வேறு இட முன்னேற்ற கூட்டமைப்பு சார்பில் உலக அளவில் ஆளுமையிலும், மக்கள் சேவையிலும் சிறந்து விளங்கும் முன்னணி பெண் தலைவர்களை தேர்ந்தெடுத்து வருகிற 7-ம் தேதி சிகாகோ இலியானாஸ் நகரில் நடைபெறும் 9வது ஆண்டு மகளிர் தின விழாவில் அமெரிக்க எம்.பி. டேனி கே.டேவிஸ் காணொலி காட்சி மூலம் விருதுகளை வழங்குகிறார்.
இவ்விழாவில் இந்தியா, அமெரிக்கா, ஆப்ரிக்கா, கனடா, ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
கொரோனாவுக்கு பின் வருங்கால உலக சீரமைப்பில் பெண்களின் பங்கு என்ற தலைப்பில் இந்த வருடம் விருது வழங்கப்பட இருக்கின்றது.
முதல் விருது அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ்க்கும், 2வது விருது தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் வழங்க உள்ளனர்.
மேலும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மொத்தம் 20 பெண்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.