குற்றாலம், ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவை எப்போது திறக்கப்படும் என்பதை சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவித்துள்ளார்.
இரண்டாவது அலை கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இதனிடையே கொரோனா பரவல் குறையத் தொடங்கியதால் பல்வேறு தளர்வுகள் தமிழக அரசால் அளிக்கப்பட்டன, இந்த நிலையில் சினிமா திரையரங்குகள், மால்கள், பொழுது போக்கு இடங்கள், சுற்றுலா தலங்கள் போன்றவற்றிற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இருப்பினும் நீர்வீழ்ச்சிகளில் மட்டும் பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்படாமலே இருந்து வந்தது. இதனிடையே குற்றாலம் மற்றும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிகளை பொதுமக்கள் குளிக்க திறக்கப்படுவது குறித்து வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறுகையில், வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் தென்காசி மாவட்டம் குற்றாலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.
கொடைக்கானல், நீலகிரி, ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்ட நிலையில் குற்றாலம், ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிகள் மூடப்பட்டே இருந்ததால் அங்கு வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டிருந்தனர்.
தற்போது குற்றாலம், ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது அப்பகுதி வியாபாரிகள், பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் தென்னகத்தின் ஸ்பா என வர்ணிக்கப்படும் குற்றாலம் நீர்வீழ்ச்சிகளில் குளித்து மகிழ சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் உள்ளனர்.