பள்ளிகளில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நாள்களில், அவர்களது பெற்றோரையும் வரவழைக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணாக்கர்களுக்கு அவரவர் பள்ளியிலேயே மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று முதல் தடுப்பூசி செலுத்தப்படுமென பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
பிறந்த ஆண்டு 2007 அல்லது அதற்கு முன் உள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். பயனாளிகள் நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம் – அல்லது ஏற்கெனவே உள்ள கணக்கு மூலம் இணையத்தில் பதிவு செய்யலாம் அல்லது தனிப்பட்ட மொபைல் எண் மூலம் புதிய கணக்கை உருவாக்கிக் கொள்ளலாம்.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை ஆணையருக்கு அனுப்பப்பட்ட தகவலில், தடுப்பூசிகள் கொண்டு வரும் குழுவுடன் ஒருங்கிணைக்கும் தொடர்பு அதிகாரியாக ஆசிரியர் ஒருவரை நியமிக்குமாறு கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.
தடுப்பூசி போட பள்ளிகளில் போதிய இடவசதியை வழங்கிடுமாறு அனைத்துப் பள்ளி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாணாக்கர்களின் பெற்றோருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து, தடுப்பூசி செலுத்தும் நாளில் அவர்களையும் பள்ளிக்கு வரவழைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.