கனடாவில் உள்ள ஸ்குவாமிஷ் (Squamish) பகுதியில் குறைந்த வெப்பநிலை காரணமாக உறைபனி சூழ்ந்துள்ளது. சமீபத்தில் இங்கு எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.
நிலப்பரப்பை சூழ்ந்து இருக்கும் உறைபனி மீது வெளியேறும் ஓடை நீரானது சிறிது நேரத்தில் கானல் நீர் போல மாயமாகி விடுகிறது.
இந்த வீடியோவை பதிவு செய்து பிராட் அட்சிசன்(Brad Atchison) என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ குறித்து அவர் குறிப்பிடுகையில், “நேற்று காலை ஸ்குவாமிஷ் பகுதியிலுள்ள ஷானான் நீர்வீழ்ச்சியில் நிகழ்ந்த ஒரு அறிய நிகழ்வுக்கு இதுதான் உதாரணம்.
இந்த ஓடை உங்கள் கண்முன்னே மறைகிறது” என்று கூறினார். இந்த வீடியோ இதுவரை 8 லட்சம் பார்வையாளர்களை தாண்டி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
சிலர் இதனை ஆச்சர்யத்துடன் பார்க்கையில், சிலரோ இதை போலியானது என்று குறிப்பிட்டு வந்தனர். அதற்கு பதிலளிக்கும் வகையில் பதிவர் கூறுகையில், “என்னை ட்விட்டரில் பின்தொடர்பவர்களுக்காக இந்த வீடியோவை பதிவிட்டேன், தெளிவாக தெரியும் வகையில் zoom செய்து வீடியோ பதிவிட்டேன்.
சிலர் இது போலியானது என்று கூறுகிறார்கள், ஆனால் அது இல்லை, நான் ஒருபோதும் அப்படி செய்யமாட்டேன் இது உண்மையான நிகழ்வு” என்று கூறியுள்ளார்.
ஸ்குவாமிஷ் (Squamish) மற்றும் வான்கூவர் (Vancouver) ஆகிய பகுதிகளில் இதுவரையில் வரலாறு காணாத அளவில் குளிர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தி வெதர் நெட்வொர்க்கின் வானிலை ஆய்வாளர் ஜெஸ்ஸி உப்பல் கூறுகையில், இத்தகைய குறைந்த வெப்பநிலை காலத்தில் வீடியோவில் உள்ளது போன்ற சில அறிய நிகழ்வுகள் எப்போதாவது நடைபெறும்” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், குறைந்த வெப்பநிலை காரணமாகவும், வரலாறு காணாத பனியாலும் நீரின் மேற்பரப்பு உறைபனியாக மாறிவிட்டது. இருப்பினும் இவை மென்மையான அடுக்கு தான். பனிக்கு உள்ளே உள்ள நீரானது கொந்தளிப்புடன் இருப்பதால் இவை அவ்வப்போது வெளிவருகின்றன,
அவ்வாறு வெளியில் வரும் நீரானது குறைந்த வெப்பநிலை காரணமாக மீண்டும் பனியாக மாறிவிடுகிறது. இது தான் ஓடை நீர் மறைவது போன்ற மாய பிம்பத்தை ஏற்படுத்துகின்றது என்று கூறியுள்ளார்.