தமிழகத்தில் அடிக்கடி அதிகாரிகள் மாற்றம் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் திமுக ஊழல் பட்டியல் வெளியீடு அதிகரிப்பால் அதிர்ச்சி அடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு நிர்வாகத்தில் பெரிய அளவில் மாற்றம் செய்து, அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார் என தெரியவந்துள்ளது. ஒரே நாளில், 51 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். உள்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு புதிய செயலர்கள் நியமிக்கப்பட்டுஉள்ளனர். ஊழல் புகார்களால் உருவான களங்கத்தை தீர்க்க, தி.மு.க., அரசு முயற்சி எடுத்துள்ளது.
தமிழக அரசின் உள்விவகாரங்கள், ‘டெண்டர்’ முறைகேடு என அனைத்தையும், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அவ்வப்போது பொது வெளியில் வெளியிட்டு, தி.மு.க., அரசுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார்.
ஆளுங்கட்சியின் குறைகளை துணிச்சலாக, புள்ளி விபரங்களுடன் அவர் சுட்டிக்காட்டுவதால், மக்களிடம் அவருக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில், தமிழக அரசின் தலைமை செயலகத்துக்கு, மாமல்லபுரம் அருகே புதிய கட்டடம் கட்ட, உயர் மட்ட அளவில் ஆலோசனை நடந்தது.தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, அதை உடனடியாக பொது வெளியில் தெரிவித்ததுடன், அதை மையமாக வைத்து, அமைச்சர்கள் கிழக்கு கடற்கரை பகுதியில், அதிக நிலங்களை வாங்கி குவிப்பதாகவும் குற்றம் சாட்டினார். இது, அரசு தரப்பில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்த விஷயம், எப்படி அண்ணாமலைக்கு சென்றது என்ற கேள்வி எழுந்தது.அடுத்து, மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் வீட்டு வசதித் துறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்த ஆதாரங்களை, அண்ணாமலை வெளியிட்டார். கர்ப்பிணியருக்கான ஊட்டச்சத்து பெட்டக கொள்முதல் டெண்டரில், 100 கோடி ரூபாய் லஞ்சம் கைமாறியதாகவும் குற்றம் சாட்டினார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் எல்லாம், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. அண்ணாமலை கூறியது தவறு என, அமைச்சர்கள் தினமும் பதில் அளித்து வருகின்றனர்.
டெண்டர் விடும் முன்பே, அரசு தரப்பில் நடந்த ஆலோசனை கூட்ட விபரங்கள், அரசு எடுக்கும் முடிவுகள் அனைத்தையும், அண்ணாமலை துல்லியமாக வெளியிடுவது, அரசு தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அரசு அதிகாரிகள் சிலர், அரசின் தவறுகளை ஆதாரங்களுடன், அண்ணாமலைக்கு எடுத்துக் கொடுப்பதாகவும் தகவல் வெளியானது.
இதை, அண்ணாமலையும் உறுதிப்படுத்தினார்.அதைத் தொடர்ந்து, ஊழல் புகாரால் உருவான களங்கத்தை தீர்க்க, அண்ணாமலைக்கு விஷயங்கள் செல்வதை தடுக்க, பெரிய அளவில் அதிகாரிகள் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதை உறுதி செய்வது போல, இம்மாதம் 5ம் தேதி, 44 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.அதன் தொடர்ச்சியாக, நேற்று உள்துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர்கள், நான்கு மாவட்ட கலெக்டர்கள் உட்பட, 51 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை, தலைமை செயலர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.
கடந்த 2019 டிசம்பர் முதல் உள்துறை செயலராக இருந்த பிரபாகர், வருவாய் நிர்வாக ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். புதிய உள்துறை செயலராக பணீந்திர ரெட்டி நியமிக்கப்பட்டு உள்ளார்.அதேபோல, 2020 ஜூன் 12 முதல், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன், கூட்டுறவு, உணவு மற்றும் பாதுகாப்புத் துறை செயலராகநியமிக்கப்பட்டுள்ளார்.
மக்கள் நல்வாழ்வுத் துறை செயலராக பதவி யேற்ற நாளிலே, சரியாக இரண்டு ஆண்டுகள் கழித்து இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். நேற்று இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளில் பெரும்பாலானோர், தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய பதவியில் நியமிக்கப்பட்டனர். தற்போது, மீண்டும் இடமாற்றப்பட்டுள்ளனர்.இதைத் தொடர்ந்து, இரண்டாம் நிலை அதிகாரிகளும் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக, அரசு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.அதிகாரிகள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவது பொதுமக்கள் மத்தியில் திமுக அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
