மேயர் ஆடையில் இருந்தநிலையில், திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் காலில் தஞ்சாவூர் மேயர் சண்.ராமநாதன் விழுந்து வணங்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சை மாநகராட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். அப்போது மேயர் உடையில் வணக்கத்திற்குரிய மேயர், உதயநிதி ஸ்டாலின் காலில் விழுந்து வணங்கினார். இதனை உதயநிதி ஸ்டாலின் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
இந்த காட்சி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. உதயநிதி ஸ்டாலின் குறித்து தொடர்ச்சியாக பல்வேறு சர்ச்சையான செய்திகள் அடுத்தடுத்து வெளியான வண்ணம் உள்ளன. சில செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உதயநிதி குறித்து மீண்டும் ஒரு செய்தி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொண்டர்கள் யாரும் ஆர்வ மிகுதியால் காலில் விழ வேண்டாம் என சில வருடங்களுக்கு முன்பு காட்டமான அறிக்கையை வெளியிட்டு இருந்தார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். அந்த அறிக்கையில், ”தொண்டர்கள் காலில் விழுவதை ஒருபோதும் தான் விரும்பியதில்லை. சிலர் ஆர்வ மிகுதியால் காலில் விழுந்து வணங்க முயற்சிப்பது தன்னை மனதளவில் பெரும் நெருக்கடிக்கு ஆளாக்குகின்றனர்.
சுயமரியாதை வழியில் தன்மானம் காக்கும் இயக்கத்தில் வந்த திமுக-விற்கு, காலில் விழும் செயல் உடன்பாடில்லாத விஷயம். எப்போதும், அன்பின் அடையாளம் போதும் அடிமை நிலை வேண்டாம். வளைந்து குனிந்து தரையில் கால்நோக்கி கும்பிடு போடுபவர்களால் தமிழகம் பாழ்பட்டுக் கிடக்கிறது. திமுக-வினருக்கு பள்ளமான பாதை வேண்டாம் எனவும் தலை நிமிர்ந்து வாழ்வதோடு தமிழகத்தையும் தலை நிமிர்த்துவோம்” என குறிப்பிட்டு இருந்தார்.இந்த நிலையில் உதயநிதி காலில் மாநகராட்சி மேயர் ஒருவர் அதுவும் மேயர் உடையிலேயே காலில் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலர் மத்தியில் அதிர்ச்சி யையும் ஏற்படுத்தி உள்ளது.
