உலகம் முழுவதும் இன்று (புதன்கிழமை) முத்த தினம் கொண்டாடப்படுகிறது.
முத்தம் என்பது காதலர்களுக்கு இடையே காதலை வெளிப்படுத்தும் ஒரு விஷயமாக மட்டும் அல்லாமல் அன்பின் வெளிப்பாடாக கருதப்படுகிறது. வெளிநாடுகளில் நண்பர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும்போது கூட கன்னத்தில் முத்தமிட்டுக் கொள்வதை காண முடியும். ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்துக் கொள்வதால் பல்வேறு நன்மைகள் ஏற்படுவதாக சமீப காலமாக மேற்கத்திய நாட்டு அறிஞர்கள் கண்டறிந்துள்ளார்களாம். முக்கியமாக முத்தம் திருமணமான தம்பதிகள் இடையே சண்டை ஏற்படாமல் இருக்க பெரிதும் உதவுகிறதாம். தினம்தோறும் தனது காதலன் அல்லது காதலியை முத்தமிடுபவர்கள் அன்றைய தினத்தில் மிகவும் மகிழ்ச்சியாகவும், சோர்வில்லாமலும் இருப்பதாக கூறப்படுகிறது.
முத்தமிட்டுக் கொள்பவர்கள் சாதாரண மக்களை விட கூடுதல் காலம் வாழ்வதாக ஆய்வாளர்கள் சிலர் கூறியுள்ளார்கள். மன அழுத்தத்தை குறைப்பதில் முத்தத்திற்கு முக்கியமான பங்கு உள்ளது. மன அழுத்தம் உள்ளவர்கள் தினம்தோறும் தனது இணையை முத்தமிடுவதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்க முடியுமாம். மன அழுத்தம் மட்டுமல்ல உடல் எடையை குறைப்பதிலும் முத்தம் முக்கிய பங்கு வகிக்கிறதாம். உதட்டை கவ்வி கொடுக்கும் பிரெஞ்சு முத்தம் மூலம் பல கலோரிகள் உடலில் இருந்து எரிக்கப்படுகிறதாம். உடல் எடையை குறைக்க நாள் கணக்கில் ஓடுவது போல சில முத்தங்களையும் தட்டி விடலாமாம்.
சாதாரணமாக சுவாசிக்கும்போது 20 முறை காற்றை சுவாசிக்கிறோம். ஆனால் ஒரு தீவிர உதட்டு முத்தத்திற்கு பின் 60 முறை வரை மூச்சை இழுத்து விடுகிறோமாம். இதனால் நுரையீரல் செயல்திறன் அதிகரிப்பதோடு, சுவாச பிரச்சினை ஏற்படாமல் இருக்கவும் வழி செய்கிறது. இது தவிர மேலும் பல நன்மைகளும் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். முத்தம் ஒவ்வொருவருக்குள்ளும் காதலையும், மனமகிழ்ச்சியையும் அளிக்கிறது.
ஒரு முத்தத்தில் குறைந்தது 12 கலோரிகள் எரிக்கப்படுகின்றன. ஒரு சிறிய முத்தத்தில் உதடுகளுக்கு அருகேயிருக்கும் இரண்டு தசைகள் உள்பட, முகத்திலிருக்கும் 12 தசைகளுக்கு வேலை கொடுக்கிறோம். ஆழமான முத்தத்தில் 34 முகத்தசைகள் தூண்டப்படுகின்றன. முத்தம் முகத்திலிருக்கும் 34 தசைகளை இயங்கவைத்து, அவற்றை ஆரோக்கியமாக்கி, முகப்பொலிவுக்கு வழிவகுக்கும் என்று சொல்லப்படுகிறது