
மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி மற்றும் அவரது மகள் கோவா பார் உரிமத்திற்கு விண்ணப்பிக்கவில்லை என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
கோவாவில் மந்திரி ஸ்மிருதி இரானியின் மகள் சட்டவிரோதமாக மதுக்கடை மற்றும் பார் நடத்தி வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. இதனை தொடர்ந்து, மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி தன் மீதும், தனது மகள் மீதும் காங்கிரஸ் தலைவர்கள் பவன் கேரா, ஜெய்ராம் ரமேஷ் மற்றும் நேட்டா டிசோஷா ஆகியோர் ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டியிருக்கின்றனர் என்றும், தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக நஷ்டஈடு தர வேண்டும் என்றும் சமீபத்தில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், இந்த வழக்கின் விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி, அவரது மகள் குறித்த அவதூறான சமூகவலைதளப் பதிவுகளை காங்கிரஸ் தலைவர்கள் மூவரும் 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து இன்று இந்த வழக்கினை தொடர்ந்து விசாரித்த நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், மந்திரி ஸ்மிருதி இரானி மற்றும் அவரது மகள் ஜோயிஷ் ஆகியோர் கோவா உணவகத்தின் உரிமையாளர்கள் அல்ல என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. ஸ்மிருதி இரானியோ அல்லது அவரது மகளோ பார் உரிமத்திற்கு விண்ணப்பிக்கவில்லை. ஆகவே அவர்களுக்கு ஆதரவாக எந்த உரிமமும் வழங்கப்படவில்லை என்றும் கூறியுள்ளது. மேலும், சமூகத்தின் மரியாதைக்குரிய உறுப்பினரான ஸ்மிருதி இரானியின் நற்பெயரை பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் நீதிமன்றம் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.