திருவண்ணாமலை ஹோட்டலில் வழங்கிய பீட்ரூட் பொரியலில் இறந்த எலியின் தலை கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.உறவினர்களுடன் ஹோட்டலை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசார் தர்ணாவில் ஈடுப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆரணி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் முரளி. இவரது உறவினர் சிலதினங்களுக்கு முன்பு இறந்து விட்டார். நேற்று இறந்தவர் படத்தை வைத்து குடும்பத்தினர் வழிபடும் நிகழ்ச்சியை நடத்தினர். அப்போது உணவு படையலிடுவதற்காக ஆரணி பழைய பஸ் நிலையத்தை அடுத்த கோட்டை மைதானம் செல்லும் வழியில் உள்ள சைவ உணவகத்தில் ஆர்டர் கொடுத்துள்ளனர்.
அதன்படி ஹோட்டல் நிர்வாகத்தினர் அந்த வீட்டுக்கு உணவை வாகனத்தில் அனுப்பி டோர் டெலிவரி செய்துள்ளனர். அந்த உணவு படையலிடப்பட்டு வணங்கியபின் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு பரிமாறப்பட்டு அனைவரும் சாப்பிட்டனர்.
அதன்பின்னர் மீதமான உணவுகளை வேறு பாத்திரத்திற்கு மாற்றியபோது ஹோட்டலில் வழங்கிய பீட்ரூட் பொரியலில் எலி தலை ஒன்றின் துண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து ஹோட்டல் உரிமையாளருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் உணவு டோர் டெலிவரி செய்யப்பட்ட வீட்டுக்கு வந்து தாங்கள் வழங்கிய உணவை பார்வையிட ஹோட்டல் நிர்வாகத்தினர் வரவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த முரளி தரப்பினர் அந்த பகுதியை சேர்ந்த நகரமன்ற உறுப்பினர் கு.வினாயகம் தலைமையில் எலி தலை கிடந்த பொரியலுடன் ஹோட்டலுக்கு வந்து முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் ஹோட்டலின் வெளியே சாலையில் நின்று தர்ணாவில் ஈடுப்பட்டனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த ஆரணி நகர போலீசார் தர்ணாவில் ஈடுப்பட்ட நபர்களை அப்புறப்படுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் ஹோட்டலுக்கு சென்று உணவு மாதிரி எடுத்து பரிசோதனைக்கு உட்படுத்தி எடுத்துச் சென்றனர்.