அகமதாபாத்-மும்பை இடை யிலான ‘வந்தே பாரத்’ ரயில் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளது. இந்த ரயில் 491 கி.மீ. தூரத்தை சுமார் 5 மணி நேரத்தில் கடந்தது.
குஜராத் மாநிலம் அகமதாபாத், மகாராஷ்டிர மாநிலம் மும்பை இடையே வந்தே பாரத் ரயில் இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், கடந்த 9-ம் தேதி சோதனை ஓட்டம் நடைபெற்றது. இது வெற்றி பெற்றதாக மேற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சோதனையின்போது இந்த ரயிலின் வேகம் 52 விநாடிகளில் 100 கிலோ மீட்டரை தொட்டது. இதற்கு முந்தைய வந்தே பாரத்ரயில் 54.6 விநாடிகள் எடுத்துக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ரயில் அகமதாபாத்திலிருந்து மும்பைக்கு இடைநிற்றல் இல்லாமல் செல்வதற்கு (491 கி.மீ.) 5 மணி நேரம் 14 நிமிடங்கள் எடுத்துக் கொண்டது. அதேநேரம் மும்பையிலிருந்து திரும்பிய அந்த ரயில் 5 மணி நேரம் 4 நிமிடங்களில் அகமதாபாத்தை அடைந்தது. இரு நகரங்களுக்கிடையே நிறுத்தப்பட்டு இயக்கினால் பயணம் 6 மணி நேரமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் அதிகபட்சம் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் பயணிக்கும்.
எல்லாம் திட்டமிட்டபடி நடைபெற்றால் இந்த மாத இறுதி அல்லது தீபாவளி பண்டிகைக்குள் இந்த ரயில் சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரயில் சேவையைத் தொடங்க, ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
அகமதாபாத், மும்பை வழித்தடத்தில் ஏற்கெனவே சதாப்தி மற்றும் தேஜஸ் ஆகிய விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதே வழித்தடத்தில் புல்லட் ரயிலை இயக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. புல்லட் ரயில் மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் பயணிக்கும். இதன்மூலம் பயண நேரம் 2 முதல் 3 மணி நேரமாகக் குறையும்.
இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன. ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் வாரணாசி-புதுடெல்லி இடையே இயக்கப்படுகிறது. 16 ஏ.சி. பெட்டிகள், நவீன இருக்கைகள், மோதல் தவிர்ப்பு தொழில்நுட்பம் உள்ளிட்ட நவீன வசதிகள் கொண்ட இந்த ரயிலில் 1,128 பேர் பயணிக்கலாம். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் 75 வந்தே பாரத்ரயில்களை தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.