கேரளாவில் திருவோணம்பண்டிகைக்கு வெளியான பம்பர் லாட்டரி சீட்டுகள் ரூ.215 கோடிக்கு விற்று சாதனை படைத்தது.ஓணம் பம்பர் குலுக்கலுக்காக கேரள அரசு மொத்தம் 60 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிட்டு லாட்டரி டிக்கெட்டின் விலையை ரூ.300-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்திய பிறகும் விற்பனை குறையவில்லை என்பது சிறப்பம்சமாகும்.
கேரளாவில் லாட்டரி விற்பனையை அரசே நடத்தி வருகிறது. முக்கிய பண்டிகை நாட்களில் பம்பர் லாட்டரி குலுக்கல் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ஓணப்பண்டிகையையொட்டி பம்பர் லாட்டரியை கேரள அரசு அறிமுகம் செய்தது. இதன் முதல் பரிசாக ரூ.25 கோடி அறிவிக்கப்பட்டது. ஒரு சீட்டின் விலை ரூ.500 என்றும் கூறப்பட்டது. கடந்த ஆண்டு இதே குலுக்கலுக்கான சீட்டு ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஓணம் பம்பர் குலுக்கலுக்காக கேரள அரசு மொத்தம் 60 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிட்டு இருந்தன. இதன் குலுக்கல் வருகிற 18-ந் தேதி நடக்க உள்ளது.
இந்நிலையில் ஓணம் பம்பருக்காக அச்சிடப்பட்ட லாட்டரி சீட்டுகள் 89 சதவீதம் விற்பனை ஆகி உள்ளது. அதாவது அச்சிடப்பட்ட 60 லட்சம் சீட்டுகளில் 53 லட்சத்து 76 ஆயிரம் சீட்டுகள் விற்பனை ஆகி உள்ளன. இதன்மூலம் அரசுக்கு ரூ.215 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
அனைத்து சீட்டுகளும் விற்பனை ஆனால் ரூ.240 கோடி வருவாய் கிடைக்கும். இது பற்றி லாட்டரி துறை அதிகாரிகள் கூறும்போது, கேரளாவில் கடந்த ஓணப்பண்டிகையின்போது லாட்டரி மூலம் ரூ.124.5 கோடி வருவாய் கிடைத்தது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு இதுவரை மட்டும் ரூ.91 கோடி கூடுதல் லாபம் கிடைத்துள்ளது. இம்முறை ஒரு டிக்கெட்டின் விலையை ரூ.300-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்திய பிறகும் விற்பனை குறையவில்லை என்றனர்.