விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதியினர் வாடகைத்தாய் சட்ட விதிகளை முறையாகப் பின்பற்றினார்களா என்று ஊரக மருத்துவ இயக்குநரகம் மூலம் விளக்கம் பெறப்படும் என்று தமிழக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை – கிண்டியில் உள்ள எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் டாக்டர் சண்முகசுந்தரம் பெயரில் புதிய இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. இந்த இருக்கையை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு என்பது இல்லை. இது குறித்து நாளை அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. எங்கு மருந்து தட்டுப்பாடு இருந்தாலும் 104 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
மருத்துவப் பல்கலைக்கழக வரலாற்றில் இந்தியாவில் முதன்முறையாக ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு இருக்கை உருவாக்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தின் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என கேட்டோம். ஆளுநர் எந்த முறையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் எனக் கேள்வி எழுப்பி இருந்தார். பல்கலைக்கழகம் துவங்கும் நேரத்தில் எந்த முறை உள்ளதோ அவ்வாறே நடைபெறும் என பதில் அளித்துள்ளேன். எனவே, ஒப்புதல் அளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா தம்பதியினருக்கு ஞாயிற்றுக்கிழமை இரட்டை ஆண் குழந்தை பிறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்பாக மருத்துவ ஊரகப் பணிகள் இயக்குநரகம் தரப்பில் விளக்கம் கேட்கப்படும். கருமுட்டை விவகாரம் தொடர்பாக தற்பொழுதுதான் வழிகாட்டுதல்கள் முறையாக வெளியிடப்பட்டுள்ளது. இதனால், இந்த தம்பதி கருமுட்டை செலுத்தி பெற்றார்களா எனவும் தெரியவில்லை” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டை ஆண் குழந்தைகள்:
தமிழ் திரையுலகில் ‘ஐயா’ திரைப்படம் மூலம் அறிமுகமாகி, தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்னும் பெயருடன் வலம் வருபவர் நடிகை நயன்தாரா. திரைப்பட இயக்குநர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருபவர் விக்னேஷ் சிவன். கடந்த 2015-ம் ஆண்டு ‘நானும் ரவுடிதான்’ திரைப்படத்தில் நடித்தபோது நயன்தாராவுக்கும், அந்த திரைப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது. 7 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த ஜூன் 9-ம் தேதி இருவீட்டார் சம்மதத்துடன் விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணம் நடந்தது. மாமல்லபுரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு திரைத் துறையினர் மட்டுமின்றி, அரசியல் பிரமுகர்களும் வந்திருந்து, தம்பதிகளை வாழ்த்தினர்.அடுத்த நாளே திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசித்தனர்.
பின்னர், விக்னேஷ் சிவனுடன் கேரளாவுக்கு சென்று தாயிடம் ஆசி பெற்ற நயன்தாரா, அங்குசில நாட்கள் தங்கியிருந்தார். பின்னர், தேனிலவுக்காக தாய்லாந்துக்கு சென்றனர். இதுதொடர்பான தங்களது புகைப்படங்களையும் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பதிவிட்டு வந்தனர். பிறகு, மீண்டும் திரைப் பணியில் இருவரும் கவனம் செலுத்தி வருகின்றனர். தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கும் ‘ஜவான்’ படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இந்நிலையில், தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்திருப்பதாக விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று அறிவித்துள்ளார்.
அதில் அவர், “நயனும், நானும் அம்மா – அப்பா ஆகிவிட்டோம். எங்களுக்கு 2 ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. எங்களது பிரார்த்தனைகள், முன்னோரின் ஆசிர்வாதங்கள், நன்மைகள் எல்லாம் சேர்ந்து இரு குழந்தைகள் வடிவில் எங்களுக்கு கிடைத்துள்ளது. எங்களுடைய உயிர் மற்றும் உலகத்துக்கு உங்கள் அனைவருடைய ஆசிர்வாதங்களும் தேவை” என்று அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
குழந்தைகளின் பாதங்களில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் முத்தமிடும் புகைப்படங்களையும் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். இதை விக்னேஷ் சிவன் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே, ஆயிரக்கணக்கானோர் ரீட்வீட் செய்ததுடன், வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர். இவர்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
நயன்தாரா இரட்டை குழந்தை விவகாரம் பேசு பொருளாக மாறி உள்ள நிலையில், இந்தியாவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொள்ளும் முறை தடை செய்யப்பட்டுள்ளது. வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதில் விதிகளை மீறினார்களா விக்கி-நயன் தம்பதி என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். திருமணமான 4 மாதங்களில் நயன்- விக்கி இரட்டை குழந்தைகள் எப்படி? என கேள்விக்கனைகளை தொடுத்து வருகின்றனர். விதிமுறைகள் திருமணமாகி 5 ஆண்டுகள் முடிந்திருக்க வேண்டும். தம்பதியில் ஒருவர் குழந்தைப்பேறுக்கு தகுதியற்றாவராக இருக்க வேண்டும். தம்பதிக்கும் வாடகைத்தாய்க்கும் தகுதிச்சான்றிதழ் கட்டாயம். * ஒரு பெண், ஒரு முறைதான் வாடகைத்தாயாக இருக்க முடியும்.
நெருங்கிய உறவுகள் மட்டுமே வாடகைத்தாயாக இருக்க வேண்டும். வாடகைத்தாய்க்கு 16 மாத கால இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும். சட்டம் சொல்வது என்ன? * 2022-ம் ஆண்டு ஜனவரியில், வாடகை தாய் ஒழுங்குமுறை சட்டம் நடைமுறைக்கு வந்தது. வாடகை தாயை அமர்த்தும் தம்பதியர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி.
கர்ப்பப்பை அகற்றப்பட்டு இருத்தல் கர்ப்பப்பை புற்றுநோய் அல்லது வேறு விதமான நோய் பாதிப்புகள் கருத்தரிப்பதால் உயிருக்கு ஆபத்து விளைக்க கூடிய நோய் பாதிப்பு உள்ளிட்ட காரணங்கள் உள்ளவர்கள் மட்டுமே வாடகை தாய் உதவியுடன் குழந்தை பெற முடியும். வாடகை தாயாக நியமிக்கும் பெண்ணின் கர்ப்பப்பையில் அதிகபட்சமாக மூன்று முறை மட்டுமே கருமுட்டைகளை செலுத்த வேண்டும். வாடகை தாய் கருவுற்று குழந்தை பெற்றுத்தரும் காலகட்டத்தில் ஏற்படும் மருத்துவ செலவுகள் கருத்தரிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்.உயிரிழப்பு போன்றவற்றுக்கு இழப்பீடு தர ஒப்புக் கொண்டு சம்பந்தப்பட்ட தம்பதியர் அல்லது பெண், நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். குழந்தை பேறுக்கு பிறகான உடல்நல குறைபாடுகளுக்கு சிகிச்சை பெற வசதியாக, மூன்று ஆண்டுகளுக்கான முழுமையான மருத்துவ காப்பீட்டை, வாடகை தாயின் பெயரில் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் தம்பதியர் எடுத்து தர வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
