
கன்னியாகுமரி தமிழகத்தில் இந்தியை திணிப்பதாக கூறி அரசியல் செய்கிறார்கள்- சமூகத்தின் அவலங்களை எடுத்துச்சொல்ல எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. தேசியகல்வி கொள்கையில் தாய்மொழி கல்வியை ஊக்கப்படுத்தச் சொல்கிறார்கள். இதைச் சொன்னால் ஆளுநர் அரசியல் பேசலாமா என்கிறார்கள் என்றார் நாகர்கோயில் அருகே நடந்த விழாவில் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன்.
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிமலை இந்து தர்ம வித்யா பீடம் சார்பில் கொல்லம்விளையில் நடந்த சமயவகுப்பு மாணவர்களுக்கான வித்யாஜோதி பட்டமளிப்பு விழாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டார். வித்யாஜோதி பட்டத்தை வெள்ளிமலை ஆசிரம சுவாமி சைதன்யானந்தஜீ மஹராஜ் வழங்கினார். பட்டம் பெற்ற மாணவிகளுக்கு கேடயம் வழங்கி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-
ஆனால், காவியின் பலம் கறுப்பினால் மறைந்து விடக்கூடாது. ஆளுநர் இப்படி பேசலாமா என ஒரு பெரிய கேள்வி கேட்பார்கள். ஆளுநராக இருந்தாலும் நான் தமிழகத்தின் மகள் என்பதை நினைவுபடுத்துகிறேன். எல்லோரின் தர்மங்களையும், நம்பிக்கைகளையும் மதிக்க வேண்டும். ஒருவரின் எழுச்சி மற்றவரின் வீழ்ச்சி அல்ல. எல்லோரின் நம்பிக்கையும் மதிக்கப்பட வேண்டும். ஆனால் பெரும்பான்மையினரின் நம்பிக்கை மட்டும் அவமதிக்கப்படும்போது நாம் எழுச்சிக்கொள்ள வேண்டும். நமது நாட்டின் பண்பாட்டை, பழக்கவழக்கங்களை சொல்லிக்கொடுப்பதில் என்ன பிரச்சினை இருக்கிறது. அவர்கள் கருத்தை ஏன் திணிக்க வேண்டும். நாம் எதாவது பேசினால் இவர்கள் எப்படி பேசலாம் என அம்புக் கணைகளை வீசுகிறார்கள். வேறு யார் பக்கமும் அந்த அம்பு எய்யப்படுவதில்லை.
தமிழ் தமிழ் என நாம் சொல்கிறோம். இன்றைக்கு மத்திய பிரதேசத்தில் அவர்களின் மாநில மொழியான இந்தியில் மருத்துவக்கல்வி கொண்டு வந்திருக்கிறார்கள். நீங்கள் அரசியலுக்காக மட்டும்தான் பேசுகிறீர்கள். தமிழ் மீது அக்கறை இருந்தால் அதுபோல முயற்சி செய்து ஒரு தாய்மொழி மருத்துவக்கல்வியை இங்கு கொண்டுவந்திருக்கலாமே.