கேரளா மற்றும் தமிழகத்திற்கு இயக்கப்பட்டு வரும் பேருந்தை ‘கபாலி’ எனும் ஒற்றை யானை துரத்தி உள்ளது. அப்போது அந்த யானை பேருந்தை தாக்கவும் முயன்றுள்ளது. இதிலிருந்து தப்பிக்கும் நோக்கில் பேருந்தை சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் ரிவர்ஸ் கியரில் இயக்கி உள்ளார் அதன் ஓட்டுநர். அதுவும் குறுகலான மற்றும் வளைவுகள் அதிகம் நிறைந்த பாதையில்.இந்தச் சம்பவம் அண்மையில் நடந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் சாலக்குடி மற்றும் தமிழகத்தின் வால்பாறைக்கு இயக்கப்படும் தனியார் பேருந்தான ‘சீனிக்காஸ்’ பேருந்தை கபாலி யானை துரத்தி வந்து தாக்க முயன்றுள்ளது. அப்போதுதான் பேருந்தை ரிவர்ஸ் கியரில் இயக்கி உள்ளார் ஓட்டுநர் அம்புஜாக்ஷன். அதன்மூலம் அவர் ரியல் ஹீரோவாகி உள்ளார்.
சிறிதும் மனம் தளராமல் முன்பக்கம் யானை துரத்தி வந்த நிலையில், பேருந்தை ரிவர்ஸ் கியரில் இயக்கிய அவரது செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். சுமார் 1 மணி நேரம் பேருந்தை அந்த யானை தொடர்ந்து வந்ததாக தெரிகிறது. அம்பலப்பாறை எனும் பகுதியில் பேருந்தை யானை வழி மறித்துள்ளது. அங்கிருந்து ஆனகாயம் வரை துரத்தி வந்துள்ளது.
பின்னர் காட்டுப் பகுதிக்குள் கபாலி யானை நுழைந்துள்ளது. இந்தப் வழியாக சென்று வரும் வாகனங்களை தொடர்ந்து கபாலி யானை துரத்தி வருவதாக தெரிகிறது. சில நேரங்களில் வாகனத்தை தாக்கவும் செய்யுமாம் கபாலி .