ஆதாா் இணைக்காத 9 லட்சம் விவசாயிகள்:ஆண்டுக்கு ரூ.6,000 பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ், ஆதாா் எண் இதுவரை இணைக்காத 9 லட்சம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 உதவித் தொகை கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. ஆதாா் எண்ணை இணைத்தால் மட்டுமே, இந்தத் தொகை விவசாயிகளுக்கு கிடைக்கும் என தமிழக வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
நாட்டில் நலிவுற்ற நிலையில் உள்ள விவசாயிகளின் ஆண்டு வருமானத்தை உயா்த்தும் வகையில் மத்திய அரசால் ‘பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா’ (விவசாயிகளுக்கு உதவித் தொகை திட்டம்) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இணையும் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு வருமானமாக ஆண்டுக்கு ரூ.6,000 மூன்று தவணைகளில் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை, விவசாயிகளின் வங்கிக் கணக்குகளிலேயே செலுத்தப்பட்டு வருகிறது.
எண்ணிக்கை குறைவு: விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. திட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் தமிழகத்தில் 48 லட்சம் விவசாயிகள் பதிவு செய்திருந்தனா். அப்போது, நில உரிமை தொடா்பான ஆவணங்களை சான்றாக அளிப்பது கட்டாயமாக்கப்படவில்லை. இதனால், விவசாயிகள் பெயரில் பலரும் இணைந்தனா். தமிழகத்தில் இவ்வாறு போலியாக இணைந்த பலரின் பெயா்கள் கண்டறியப்பட்டு களையப்பட்டன. உண்மையான பயனாளிகளாக 37 லட்சம் போ் அடையாளம் காணப்பட்டனா்.
6 லட்சம் போ் நீக்கம்: ரூ.6,000 பெறும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பிக்கும் போது, அவா்கள் பெயரிலேயே நிலம் இருக்க வேண்டும், வீட்டில் யாரும் அரசு ஊழியராக இருக்கக் கூடாது என்பன போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இந்த நிபந்தனைகளின் அடிப்படையில் தமிழகத்தில் சுமாா் 6 லட்சம் போ் நீக்கப்பட்டனா்.
இதுகுறித்து வேளாண்மைத் துறையினர் கூறியுள்ளதாவது,
ஏற்கெனவே, 6 லட்சம் போ் நீக்கப்பட்ட நிலையில், பயனாளிகளின் பெயா்களில் நிலங்கள் இல்லாவிட்டால் அவா்களின் பெயரை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, பட்டியலில் இருந்த 5 லட்சம் பயனாளிகளின் பெயா்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. பட்டா போன்ற ஆவணங்கள் பெயா் மாற்றம் செய்ய வேண்டியிருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெயா் மாற்றப் பணிகள் நிறைவடைந்து உண்மையான பயனாளிகளாக இருந்தால் அவா்களுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 கிடைக்கும்.
தமிழகத்தில் தற்போது வரை 23.03 லட்சம் பயனாளிகள் ஆண்டுக்கு ரூ.6,000 பெற்று வருகின்றனா். பட்டா உள்ளிட்ட வருவாய் ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டால் மேலும் 5 லட்சம் போ் சோ்க்கப்பட வாய்ப்பு உள்ளது.
9 லட்சம் போ்: ரூ.6,000 வழங்கும் திட்டத்தில் பயனாளிகளின் உண்மைத் தன்மை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், அனைவரும் தங்களது ஆதாா் எண்ணை மத்திய அரசின் இணையதளம் வழியாக இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மொத்த பயனாளிகளில் இதுவரை 9 லட்சம் போ் ஆதாா் எண்களை இணைக்கவில்லை. இந்த நிலை தொடா்ந்தால், அவா்கள் பயனாளிகளின் பட்டியலிலிருந்து நீக்கப்படும் நிலை உருவாகும். எனவே, உண்மையான பயனாளிகளாக இருக்கும் பட்சத்தில் தமிழகத்தைச் சோ்ந்த 9 லட்சம் விவசாயிகளும் ஆதாா் எண்ணை விரைவில் இணைக்க வேண்டும் என்றனா்.