சீனாவில் மீண்டும் ஆட்டத்தை துவக்கிய கொரோனா பாதிப்புக்கு ஒருவர் பலியான நிலையில் உயிரிழப்பு 5,233 ஆக உயர்ந்து உள்ளது.
பீஜிங், சீனாவில் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பின்னர் உலக நாடுகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி சென்றது. எனினும், கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகளால் பிற நாடுகளை விட முன்பே பரவலை சீனா கட்டுப்படுத்தி இருந்தது.
இந்நிலையில், மீண்டும் சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 39,791 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்களில் 3,709 பேருக்கு அறிகுறி காணப்படுகிறது. 36,082 பேர் அறிகுறியற்றவர்களாக இருக்கின்றனர் என சுகாதார ஆணையம் இன்று தெரிவித்து உள்ளது. சீனாவில் புதிதாக உள்ளூரில் மட்டுமே 39,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்த எண்ணிக்கையானது நேற்றுடன் (35,183) ஒப்பிடும்போது சற்று அதிகம். நேற்று புதிதாக பதிவான 35,183 பேரில் 3,474 பேருக்கு அறிகுறி தென்படுகிறது. 31,709 பேர் அறிகுறியற்றவர்கள்.
இவற்றை சீனா தனித்தனியாகவே கணக்கிட்டு வருகிறது. இதனால், சீனாவில் தொடர்ந்து 4-வது நாளாக கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டு உள்ளது. சீனாவில் கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணிநேரத்தில் ஒருவர் பலியாகி உள்ளார். இதனால், மொத்த உயிரிழப்பு 5,233 ஆக உயர்ந்து உள்ளது. சீனாவில் நேற்று வரை மொத்தம் 3 லட்சத்து 7 ஆயிரத்து 802 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.