நியூ யார்க் நகரில் இந்த ஆண்டு வெப்பநிலை வரலாறு காணாத அளவுக்கு குறைந்து எதிர்பாராத பனி மழை மற்றும் பனிக்காற்று, சூறாவளி என மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்து வருகிறது.
இந்தநிலையில்தான் செவ்வாய்க்கிழமை இரவு கனடா மற்றும் அமெரிக்காவில் ஏற்பட்ட மிகக் குறைந்த வெப்பநிலை காரணமாக பாய்ந்தோடி விழுந்து கொண்டிருந்த நயாக்ரா நீர்வீழ்ச்சி நின்று போனது. ஆம்.. நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதி அப்படியே உறைந்துபோய் நின்றுவிட்டது.
சுமார் 170 அடிக்கு கொட்டிக் கொண்டிருந்த தண்ணீர் சிறு பிள்ளைகள் விளையாடும் அட்டாக் சொன்னால் அப்படியே நின்றுவிடும் விளையாட்டைப் போல நின்று விட்டது. சில இடங்களில் நிற்க முடியாமல் பனிக்கட்டிகள் விழுந்து கொண்டிருக்கின்றன.
இந்த புகைப்படங்களும் விடியோக்களும் ஆன்லைனில் அதிவேகமாகப் பரவி வருகிறது. வழக்கமாக நயாக்ரா நீர்வீழ்ச்சியின் உள்புறம் மற்றும் வெளிப்பகுதிகளில் பனிப்படலமாக மாறுவது வழக்கம். ஆனால் இதுவரை ஒட்டுமொத்தமாக உறைபனியாகிவிட்டது அரிதுதான். இதற்கு முன்பு, 1848ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த நயாக்ரா நீர்வீழ்ச்சி முற்றிலும் உறைந்து போனதாக ஆவணங்களில் தகவல்கள் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நயாகரா என்பது ஒரு ஆற்றின் பெயர்! ஆற்றின் பெயரே அருவிக்கும் வழங்கப்படுகிறது. இந்த ஆறு கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் சென்று வடக்காகத் திரும்பி ஓடிக் கொண்டிருக்கிறது!
இதன் மேற்குக் கரையில் கனடா உள்ளது. கிழக்குக் கரையில் அமெரிக்கா உள்ளது. கனடாவையும் அமெரிக்காவையும் பிரிக்கும் எல்லையாக நயாகரா உள்ளது!
உலகில் வேறு எங்கும் இத்தகைய பேரெழிலைக் காண முடியாது என்று அமெரிக்கர்கள் பெருமிதம் கொள்ளும் நயாக்ரா நீர்வீழ்ச்சி, உறைபனி காரணமாக பகுதியாக உறைந்துபோயிருக்கிறது.
இந்த பிரம்மாண்டமான அருவியின் பேரழகைக் காண்பதெற்கென்றே கோடான கோடி மக்கள் ஆண்டுதோறும் இங்கு வந்து குவிகிறார்கள்!
உச்சியில் இருந்து கீழே விழும் அருவியின் உயரம் 170அடி. அது அப்படியே பூமியைத் துளைத்து இன்னுமோர் 170அடி ஆழத்திற்கு ஊடுருவிச் சென்று விடும். இந்த அருவி பாதி ஆகாய அருவியாகவும், பாதி பாதாள அருவியாகவும் இருக்கிறது. இந்த நீர்வீழ்ச்சியின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.
ஈரி, ஹ்யூரன், மிச்சிகன், சுபீரியர் என்னும் நான்கு மாபெரும் ஏரிகளிலிருந்து இந்தத் தண்ணீர் வந்து ஆறாய் ஓடி அருவியாய் கொட்டுகிறது. மீண்டும் ஆறாகப் பெருக்கெடுத்து கனடாவில் உள்ள ஒன்டாரியோ என்ற ஏரியில் சேர்கிறது. மீண்டும் அங்கிருந்து செயின்ட் லாரன்ஸ் என்ற பெயரோடு ஆறாகி இறுதியில் அட்லாண்டிக் பெருங்கடலில் கடலோடு கடலாய்க் கலந்து விடுகிறது.
அரை வட்ட வடிவமாகத் தோன்றும் லாடப் பாறையில் கொட்டும் அருவியும் அரைவட்ட வடிவமாகவே காணப்படுகிறது. நெடிதுயர்ந்த பாறைகளால் வளைந்த சுவர் போல சூழப்பட்டு குகை போல் இந்த இடம் உள்ளது. இதைத்தான் “பனிமூட்டப்பாவை’ என்று அழைக்கிறார்கள்.
பயங்கரமான இந்தப் பனிப்பாவைக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு நெருங்கி மக்களை அழைத்துச் சென்று சுற்றுலாப் பயணிகள் காண்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும்.
கனடாவின் கரையிலிருக்கும் உயரமான கட்டடம் ஒன்றிலிருந்து பல்வேறு வண்ணங்களில் ஒளியுமிழும் மின் விளக்குகளை அமைத்து அருவியின் மேல் விழும்படியாக ஒளிக்கதிர்களை வீசுகிறார்கள். அருவியின் தண்ணீர் தகடுகளை அந்த ஒளிக்கதிர்களால் அசையும் வண்ணப் பட்டுச் சேலைகளாய் மாற்றி விடுகிறார்கள். அமெரிக்கர்கள் தங்கள் பக்கத்திலிருக்கும் அருவிக்கு மணப்பெண்ணின் முகத்திரை என்று பெயரிட்டுள்ளனர்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் இந்த அருவி கனடாவில் இருக்கும் ஒன்டாரியோ என்ற ஏரியில்தான் விழுந்து கொண்டிருந்ததாம். பின்னர் பாறைகளை அறுத்துப் பின்னடைந்து வந்து தற்போது உள்ள இடத்தில் விழுகிறது என்று புவியியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.
