ஜன15 தை பொங்கலை தொடர்ந்து 16-ந்தேதி மாட்டுப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் அன்று மதுக்கடைகள் மூடப்படுகின்றன. வார விடுமுறையில் தொடர்ந்து பொங்கல் வருவதால் வழக்கத்தைவிட மது விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் கொண்டாட்டத்திற்கு மதுபானங்கள் குவிக்கப்பட்டு டாஸ்மாக் கடைகளில் விற்பனை மும்முரமாக துவங்கி நடந்து வருகிறது.
பொங்கல் பண்டிகை 15-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை நாளில் இந்த முறை வருகிறது. அதற்கு முந்தைய நாள் சனிக்கிழமை போகிப்பண்டிகையும் விடுமுறையில் வருகிறது. பண்டிகை நாட்கள் வார விடுமுறையில் வருவதால் டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு பொங்கலுக்கு கூடுதலாக மது விற்பனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கலை தொடர்ந்து 16-ந்தேதி மாட்டுப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் அன்று மதுக்கடைகள் மூடப்படுகின்றன. 17-ந்தேதி காணும் பொங்கல் அன்று வழக்கம்போல டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன. பொங்கல் பண்டிகையையொட்டி விடுமுறையும் அதனை சார்ந்த கொண்டாட்டங்களுக்கும் குறைவும் இருக்காது. பொங்கல் பண்டிகை நாளைவிட காணும் பொங்கல் தினத்தில் தான் டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை அமோகமாக இருப்பது வழக்கம்.
இந்த ஆண்டு வார விடுமுறையில் தொடர்ந்து பொங்கல் வருவதால் வழக்கத்தைவிட மது விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் 12 நாட்களுக்குரிய மதுபானங்கள் இருப்பு வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நகரப்பகுதியில் வசிக்கும் மக்கள் பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு செல்வதால் கிராமப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்பனை பல்மடங்கு அதிகரிக்கும் என்பதால் இருப்பு அதிகளவு வைக்க வேண்டும் என அதிகாரிகள் பணியாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர். நாளை (வெள்ளிக்கிழமை) முதல் பொங்கல் மது விற்பனை தொடங்குவதால் இன்று இரவுக்குள் அனைத்து கடைகளிலும் தேவையான அளவு ‘சரக்கு’ இருப்பு வைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 5,300 டாஸ்மாக் கடைகளிலும் முழு அளவில் மதுபானங்கள் நிரப்பப்படுகின்றன. நாளை மாலையில் இருந்து மது விற்பனை சூடு பிடிக்கத்தொடங்கும். திங்கட்கிழமை கடைகள் மூடப்படுவதால் ஞாயிற்றுக்கிழமை சுமார் ரூ.500 கோடிக்கு மேல் மது விற்பனை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கரிநாள் அன்று நண்பர்களுடன் மது விருந்தில் பங்கேற்கும் வகையில் முன்னதாகவே மதுபானங்களை மொத்தமாக வாங்கிச் செல்ல ஆர்வம் காட்டுவார்கள். இதனால் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை விற்பனை தீவிரமாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
சென்னை, மதுரை, சேலம், கோவை, திருச்சி ஆகிய 5 மண்டலங்களுக்கு உட்பட்ட கடைகளில் அனைத்து வகையான மதுபானங்களும் இல்லை என்று கூறாத அளவுக்கு இருப்பு வைக்கப்படுகிறது. மொத்தமாக பெட்டி பெட்டியாக வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 17-ந்தேதி காணும் பொங்கல் அன்று மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்படுவதால் பகல் முழுவதும் விற்பனை மும்முரமாக இருக்கும். கடற்கரை, பூங்காக்கள் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு மக்கள் செல்கின்ற அந்த நாளில் மது விற்பனை இரவு வரை படுஜோராக இருக்கும் என்று டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மொத்தத்தில் பொங்கல் பண்டிகை மதுவிற்பனை நாளை தொடங்கி 17-ந்தேதி வரை அமோகமாக இருக்கும் என்பதால் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் தவிர ஓட்டல்களில் உள்ள பார்களிலும் கூட்டம் நிரம்பி வழியக்கூடும். மேலும் காலை 11 மணி முதல் நள்ளிரவு வரை ஓட்டல்களில் மது விற்பனைக்கு அனுமதி இருப்பதால் அங்கு செல்லவும் திட்டமிட்டுள்ளனர்.