படியேறி தரிசனம் செய்ய முடியாத பக்தர்களுக்காக பழனி மலையில் அதிகமான பக்தர்கள் செல்லும் வகையில் அதிக நபர்கள் பயணிக்கும் வகையிலான வின்ச் கோயிலுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட இந்த புதிய வின்ச்சில் ஒரே நேரத்தில் 72 பேர் பயணிக்கலாம். தைப்பூச திருவிழாவிற்கு பிறகு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படும் பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் 17ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்திற்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் யாகசாலை பூஜைகள் நேற்று காலை முதல் தொடங்கியுள்ளது. தண்டாயுதபாணி சுவாமி கலசத்தில் ஆவாஹனம் செய்த பின் யாகசாலையில் எழுந்தருளினார்.
இதனிடையே ஜனவரி 26ஆம் தேதி வரை பக்தர்கள் மூலவர் தண்டாயுதபாணியை தரிசனம் செய்ய முடியாது எனவும் யாக சாலையில் எழுந்தருளும் சுவாமியை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 27ஆம் தேதி கும்பாபிஷேகம் முடிந்ததும் வழக்கம்போல் பக்தர்கள் மூலவரை தரிசிக்க அனுமதிக்கப்படுவர். இன்று முதல் 27ஆம் தேதி வரை கால பூஜை கட்டளைகள், தங்கரதப் புறப்பாடு நடைபெறாது என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் பக்தர்கள் மலைக்கோயில் செல்வதற்கு வசதியாக தெற்கு கிரிவீதியில் இருந்து ரோப்கார், மேற்கு கிரிவீதியில் இருந்து 3 வின்ச்கள் இயக்கப்படுகின்றன. இதில் முதலாவது வின்ச் 36 பேர், 2வது வின்ச் 32 பேர், 3வது வின்ச் 36 பேர் பயணிக்கும் வகையில் அமைக்கப்பட்டது. பயண தூரம் 290 மீட்டர். பயண நேரம் 8 நிமிடங்கள். குறைந்த அளவிலான பக்தர்களை மட்டுமே ஏற்றி செல்ல முடிவதால் வின்ச்சில் பயணிக்க பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது.
இதையடுத்து, பழனி கோயில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் சார்பில் நேற்று புதிதாக வடிவமைக்கப்பட்ட அதிக நபர்கள் பயணிக்கும் வகையிலான வின்ச் கோயிலுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார், கோயில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட இந்த புதிய வின்ச்சில் ஒரே நேரத்தில் 72 பேர் பயணிக்கலாம். தைப்பூச திருவிழாவிற்கு பிறகு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.