இந்தியாவில் கடந்த ஆண்டு முதல் புதிய வழித்தடங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத்’ ரயில்களில் குப்பையை அகற்றும் பணி, விமானங்களில் உள்ளதை போல் மாற்றப்பட்டு இருப்பதாகவும், பயணியர் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தி உள்ளார்.
வந்தே பாரத் ரயில்களில், இரு பெட்டிகளை இணைக்கும் பகுதியில் குடிநீர் பாட்டில்கள், உணவு உண்ட தட்டுகள் இரைந்து கிடக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது.
தெலுங்கானாவின் செகந்திராபாத் – ஆந்திராவின் விசாகப்பட்டினம் இடையிலான வந்தே பாரத் ரயிலில், துாய்மை பணியாளர்கள் சுத்தம் செய்தும், விசாகப்பட்டினம் ரயில் நிலையம் வந்து சேர்ந்ததும், பெட்டிகளில் குப்பை இரைந்து கிடப்பதாக ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.விமானங்களுக்கு இணையான சேவைகளை வழங்கும் வந்தே பாரத் ரயிலை பயணியர் சுத்தமாக வைத்திருக்க உதவ வேண்டும். குப்பையை அதற்குரிய தொட்டிகளில் மட்டுமே பயணியர் போட வேண்டும் என ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்நிலையில், வந்தே பாரத் ரயியில் குப்பையை அகற்றும் பணிக்கு மாற்று ஏற்பாடுகளை ரயில்வே அமைச்சகம் செய்துள்ளது.
விமானங்களில் இருப்பதை போல, ரயில் பயணத்தின் போது, துப்புரவு பணியாளர் ஒவ்வொரு இருக்கைக்கும் வந்து, பயணியரிடம் உள்ள காலி பாட்டில்கள், தட்டுகள் உள்ளிட்ட குப்பையை வாங்கிச் செல்லும் புதிய ஏற்பாடு நடைமுறைக்கு வந்துள்ளது.பயணியர் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.