விருதுநகர் மாவட்டத்தில் கடந்த மாதம் அடுத்தடுத்து பட்டாசு ஆலைகளில் விபத்து ஏற்பட்டு 7பேர் பலியான நிலையில் மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலைகளில் கடுமையான ஆய்வு நடத்தப்பட்டது விதி மீறி செயல்பட்ட 14 பட்டாசு தொழிற்சாலைகளின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தீபாவளி மற்றும் விழாக்கள் விஷேசங்கள் என்றால் பட்டாசும் அங்கமாகிப்போனது.தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி சாத்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன.இதில் பல விதிமுறைகள் மீறி பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு பெரும் விபத்துகள் உயிர்ச்சேதம் ஏற்படுவது சகஜமாகிப்போனது.
கடந்த மாதத்தில் மட்டுமே அடுத்தடுத்து பட்டாசு ஆலைகளில் விபத்து ஏற்பட்டு 7பேர் பலியாயினர்.பலர் காயமடைந்தனர்.இதனால் பட்டாசு ஆலைகளில் கடந்த சில நாட்களாக கடுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விதி மீறி உற்பத்தி செய்த 14 பட்டாசு தொழிற்சாலைகளின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
அதில் மேலும் கூறுகையில் விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு உற்பத்தி ஆலைகளில் ஏற்படும் வெடி விபத்துக்களைக் குறைப்பது மற்றும் அரசு விதிமுறைகளுக்குட்பட்டு பட்டாசு உற்பத்தி செய்யப்படுவதை உறுதி செய்வதுடன், விபத்தில்லா விருதுநகரை உருவாக்குவது தொடர்பாக, விருதுநகர் மாவட்ட ஆட்சியரால் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நடப்பில் உள்ள அரசு விதி முறைகளுக்கு முரணாக, சிறப்பு ஆய்வுக் குழுக்களின் ஆய்வின்போது உள்குத்தகை நடவடிக்கைகள் மற்றும் அதிகளவிலான பட்டாசு பொருட்கள் இருப்பு வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. சிவகாசி வட்டத்திற்குட் பட்ட நாகர் பயர் ஒர்க்ஸ், திருச்செல்வி பயர் ஒர்க்ஸ், தமயந்தி பயர் ஒர்க்ஸ் ஆகிய 3 பட்டாசு ஆலைகள், வெம்பக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட நயா கார்னேசன் பயர் ஒர்க்ஸ், ஸ்ரீ பாலகுரு பயர் ஒர்க்ஸ், எம்.பி. பயர் ஒர்க்ஸ், தாமரைக் கண்ணன் பயர் ஒர்க்ஸ், குரு பயர் ஒர்க்ஸ், சண்முகா பயர் ஒர்க்ஸ், முத்துகணேஷ் பயர் ஒர்க்ஸ், சீகல் பயர் ஒர்க்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய 8 பட்டாசு ஆலைகள், சாத்தூர் வட்டத்திற்குட்பட்ட ராஜேசுவரன் பயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலை, ஸ்ரீவில்லி புத்தூர் வட்டத்திற்குட்பட்ட என்.எஸ்.வி.பயர் ஒர்க்ஸ், தினேஷ் பயர் ஒர்க்ஸ் ஆகிய 2 பட்டாசு ஆலைகள் என மொத்தம் 14 பட்டாசு தொழிற்சாலைகளின் படைக்கலச்சட்ட உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகள் அனைத்தும், உரிமதாரர்களால் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்றும், உரிமதாரர்கள் தங்களது பட்டாசு தொழிற்சா லைகளை விதிமுறைகளுக்கு முரணாக வேறு நபர்களுக்கு உள்குத்தகைக்கு விடக் கூடாது என்றும், ஆய்வின் போது உள்குத்தகை விடப்பட்டது கண்டறிய ப்பட்டால் இனி வரும் காலங்களில் மேற்கண்ட பட்டாசு தொழிற் சாலை உரிமையாளர்கள் மீதும், உள் குத்தகை நடவடிக்கையில் ஈடுபட்டோர் மீதும் கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மேலும் ஆலைகளின் உரிமங்கள் நிரந்தரமாக ரத்து செய்யப்படுவதுடன், ஆலை உரிமதாரர்கள் மற்றும் குத்தகைதாரர்கள் பட்டாசு உற்பத்திக்கான உரிமங்கள் பெறுவதில் இருந்து நிரந்தரமான தடை உள்ளிட்ட மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.