
மும்பை -சோலாப்பூர், மும்பை- சாய்நகர் ஷீரடி ஆகிய இரு வந்தேபாரத் ரயில் சேவையினை மஹராஷ்டிராவில் இன்று பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் அதிவேக வந்தே பாரத் ரெயில்கள் ஓடுகின்றன. இதில் முதல் ரெயில் சேவை தலைநகர் டெல்லி- வாரணாசி இடையே கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. இந்நிலையில் புதிதாக 2 வந்தே பாரத் ரெயில்களை பிரதமர் மோடி மும்பையில் நடைபெற்ற விழாவில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தெற்கு மும்பையில் சத்ரபதி சிவாஜி முனையத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி மும்பை-சோலாபூர் இடையிலான முதல் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார். பின்னர், மும்பை – ஷீரடி இடையேயான இரண்டாவது வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார்.
மும்பை-சோலாபூர் இடையே வந்தே பாரத் ரயில் 455 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கிறது. இந்த 455 கிலோமீட்டர் தூரத்தினை 6 மணிநேரம் 30 நிமிடத்தில் வந்தே பாரத் ரயில் சென்றடைகிறது. தற்போது உள்ள நேரத்தினைக் காட்டிலும் இந்த புதிய வந்தே பாரத் ரயில் சேவை 1 மணி நேரம் முன்னதாகவே சோலாபூரை சென்றடைகிறது. அதேபோல மற்றொரு வழித்தடமான மும்பை – ஷீரடி இடையேயான 343 கிலோ மீட்டர் தூரத்தை வந்தே பாரத் ரயில் 5 மணி நேரம் 25 நிமிடத்தில் சென்றடைகிறது.
மும்பை – சோலாபூர் இடையிலான ஒரு வழிப் பயணத்துக்கு பயணச்சீட்டுக் கட்டணம் ரூ.1000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எக்ஸிக்யூட்டிவ் வகுப்புக்கான கட்டணம் ரூ.2015 ஆக உள்ளது. மும்பை – ஷீரடி இடையே ஒரு வழிப் பயணத்துக்கு பயணச்சீட்டுக் கட்டணம் ரூ.840 ஆகவும், எக்ஸிக்யூட்டிவ் வகுப்புக் கட்டணம் ரூ.1670 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உணவு சேவைகளைப் பெற தனி கட்டணத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ், மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முன்னிலை வகித்தனர்.
ரயில்களை துவங்கி வைத்த பிரதமர் மோடி கூறுகையில், புதிய இந்தியாவின் அடையாளம் வந்தே பாரத் ரயில். முதன் முறையாக மகாராஷ்ராவில் இரண்டு வந்தே பாரத் ரயில்கள் துவங்கப்பட்டுள்ளன. இந்த ரயில் மும்பை-புனே மக்களுக்கு பெரிதும் உதவும். இதனால் விவசாயிகள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் பெரிதும் பயன் அடைவார்கள்.
மஹாராஷ்டிரா முதல்வர் பேசியதாவது: பட்ஜெட்டில் மஹாராஷ்டிராவுக்கு என்ன கிடைத்தது என்று ஒரு சிலர் சொல்கிறார்கள். ரயில்வேக்கு இதுவரை 13,500 கோடி ரூபாய் ஓதுக்கவில்லை. முதன்முறையாக மாநிலத்தில் ரயில்வேக்கு இந்தத் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. எனக் கூறினார்.
நாடு முழுவதும் 10 அதிவேக வந்தே பாரத் ரெயில்கள் ஓடுகின்றன. அடுத்த வந்தே பாரத் ரயில் தமிழகம் கேரளா மாநிலத்தில் இயக்கப்படுமா என பல்வேறு தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.தமிழகத்தில் சென்னை மைசூர் இடையே இயங்கும் ரயில் கர்நாடகாவில் அதிக தூரம் இயங்கி வருகிறது.