
ஈரோடு கிழக்கு தொகுதியில் வசிக்கும் பெரும்பாலான பெண்கள் தற்போது வேலைக்கு செல்லாமல் பிரசாரத்தில் குதித்து விட்டனர். பிரசாரத்துக்கு செல்வது, தேர்தல் பணிமனையில் அமர்வது, கூட்டத்துக்கு செல்வது என்று பொதுமக்களுக்கு பண மழை கொட்டுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் தற்போது அனல் பறக்கிறது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிட்டாலும் தி.மு.க.-அ.தி.மு.க. இடையே தான் நேரடி போட்டி நிலவி வருகிறது.
தி.மு.க. ஆட்சி அமைந்து வரும் முதல் இடைத்தேர்தல் என்பதால் எப்படியும் 50 ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு அமைச்சர்கள், தி.மு.க. எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் வீடுகளுக்கு சென்று திண்ணை பிரசாரம் செய்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டு கை சின்னத்துக்கு ஆதரவு கேட்டு வருகிறார்கள்.
இதே போல் அ.தி.மு.க. சார்பிலும் 30 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் தேர்தல் பிரசாரத்தில் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் இடைத்தேர்தல் களத்தில் தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது. இடைத்தேர்தல் தி.மு.க., அ.தி.மு.க. இடையே கடும் பலப்பரீட்சையாக உள்ளது.
தங்களது ஆட்சிக்கு கிடைத்த நற்சான்றிதழாக இந்த தொகுதி வெற்றி அமைய வேண்டும் என்று தி.மு.க.வினரும், வருகிற பாராளுமன்ற தொகுதியின் முன்னோட்டமாக அ.தி.மு.க.வினரும் இந்த தொகுதியின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
அரசியல் கட்சியினருக்கு இந்த தேர்தல் ஒரு சவாலாக அமைந்து இருக்கிறது. ஆனால் சாமானியர்கள் இந்த இடைத்தேர்தலை உற்சாகமாக திருவிழாபோல் எதிர்கொள்கிறார்கள். ஈரோடு கிழக்கு தொகுதி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கிடைக்கின்ற கூலி வேலைக்கு சென்று வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
இதில் ஆண்களுக்கு ஒரு நாள்கூலியாக ரூ.450ம், பெண்களுக்கு ஒரு நாள் கூலியாக ரூ.250 முதல் 300 வரை பெற்று வந்தனர். அவர்களுக்கு இந்த இடைத்தேர்தல் ஒரு வேலைவாய்ப்பை உருவாக்கி தந்திருக்கிறது. இந்த தொகுதியில் வசிக்கும் பெரும்பாலான பெண்கள் தற்போது வேலைக்கு செல்லாமல் பிரசாரத்தில் குதித்து விட்டனர்.
காலையில் 3 மணி நேரம் ஒரு கட்சிக்கும், மாலையில் 3 மணி நேரம் மற்றொரு கட்சிக்கும் பிரசாரத்துக்கு செல்கிறார்கள். இதனால் 2 கட்சிகாரர்களிடம் இருந்தும் தலா ரூ.500 வீதம் ஒரு நாளைக்கு ரூ.1000 சம்பாதிக்கிறார்கள். இதனால் பொதுமக்கள் வேலைக்கு செல்வது போல் காலையிலேயே பிரசாரத்துக்கு தயாராகி விடுகின்றனர்.
சம்பந்தப்பட்ட கட்சியினர் வந்ததும் மினி ஆட்டோவில் அவர்களை ஏற்றி செல்கிறார்கள். சில பெண்கள் கைக்குழந்தைகளுடன் பிரசாரத்துக்கு சென்று வருகிறார்கள். பிரசாரத்துக்கு செல்வது, தேர்தல் பணிமனையில் அமர்வது, கூட்டத்துக்கு செல்வது என்று பொதுமக்களுக்கு பண மழை கொட்டுகிறது. இதனால் பொதுமக்கள் உற்சாகத்தில் உள்ளனர். நாள் முழுவதும் உழைத்தால் வரும் வருமானத்தை விட 6 மணி நேர பிரசாரம் செய்தால் ரூ.1000 வருமானம் கிடைப்பதால் வேலைக்கு செல்வதை விரும்பவில்லை.
தேர்தல் 27-ந் தேதி நடப்பதால் எப்படியும் 25-ந் தேதி வரை பிரசாரம் இருக்கும். எனவே அதற்குள் தேர்தல் பிரசாரத்துக்கு தினமும் செல்ல வேண்டும் என்று ஆர்வமாக உள்ளனர். அரசியல் கட்சியினர் பிரசாரத்துக்கு அழைக்காவிட்டாலும், பொதுமக்கள் தாமாக முன் வந்து இன்று எங்கு பிரசாரம், எத்தனை மணிக்கு வர வேண்டும் என்று ஆர்வத்துடன் கேட்கிறார்கள். அதோடு இல்லாமல் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா? என்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கேட்டு வருகிறார்கள். மொத்தத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பொதுமக்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.
சில இடங்களில் முக்கிய பிரமுகர்களை வரவேற்க குடம், சேலை மற்றும் ரூ.500 வழங்குவதாகவும் கூறப்படுகிறது. இதனால் வாக்காளர்களே பிரசாரத்தில் குதித்து உள்ளனர். ஒரு பகுதியில் அனைத்து வீடுகளும் பூட்டப்பட்டு இருந்தது. அங்கு பிரசாரத்துக்கு சென்ற ஒரு அரசியல் கட்சி பிரமுகர் ஏன் அனைத்து வீடுகளும் பூட்டப்பட்டு இருக்கிறது என்று கேட்டு உள்ளார். அதற்கு அவருடன் வந்த உள்ளூர் நிர்வாகிகள் அவர்கள் அனைவரும் நம்முடன் பிரசாரம் செய்து வருகிறார்கள் என்று கூறியதால் சிரிப்பலை ஏற்பட்டதாம்.