
கர்நாடகாவில் இது புதுமையான செயலாக உள்ளது 30 வயதை கடந்தும் மணப்பெண் கிடைக்காத 200 வாலிபர்கள் மணமகள் வேண்டி 3 நாட்கள் பாத யாத்திரையாக நடக்க உள்ளனர். பாத யாத்திரைக்கு “பிரம்மாச்சாரிகள் பாதயாத்திரை” என்று பெயரிடப்பட்டு உள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் ஏராளமான இளைஞர்கள் தவிப்பதாக சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. அவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரு அமைப்பை உருவாக்கி இருக்கிறார்கள்.
சமீபத்தில் திருமணமாகாத அந்த இளைஞர்கள் அனைவரும் ராஜா வேடம் அணிந்து ஊர்வலமாக சென்று மக்கள் கவனத்தை கவர்ந்தனர். திருமணமாகாத அந்த இளைஞர்கள் அனைவருக்கும் 30 வயதுக்கும் மேலாகிறது.
கர்நாடகாவில் மாண்டியா மாவட்டத்தில் தான் அதிக அளவு திருமணமாகாத 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் மணப்பெண் கிடைப்பதற்காக நூதன முயற்சி ஒன்றை செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி அவர்கள் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு பாத யாத்திரை செல்ல தீர்மாணித்து உள்ளனர்.
மாண்டியா தாலுக்காவில் இருந்து அந்த கோவில் சுமார் 105 கி.மீ தொலைவில் இருக்கிறது. இந்த கோவிலுக்கு அவர்கள் மணமகள் வேண்டி 3 நாட்கள் பாத யாத்திரையாக நடக்க உள்ளனர். இந்த பாத யாத்திரைக்கு “பிரம்மாச்சாரிகள் பாதயாத்திரை” என்று பெயரிடப்பட்டு உள்ளது. வருகிற 23-ந் தேதி இந்த பாத யாத்திரை தொடங்குகிறது.
இதில் சுமார் 200 திருமணமாகாத இளைஞர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 30 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாதவர்கள் இந்த பாத யாத்திரையில் கலந்து கொள்ளலாம் என்று அமைப்பாளர்கள் அறிவித்து உள்ளனர். மணமகள் தேடி நடக்கும் 3 நாட்களும் 3 வேளை உணவும், தங்கும் இடங்களும் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட் டுள்ளது.இந்த பாத யாத்திரைக்கு இலவசமாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.