
சீர்காழியில் நகர்மன்ற கூட்டத்தின்போது உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றுவதில்லை என குற்றம்சாட்டி திமுக உள்ளிட்ட 12 நகர்மன்ற உறுப்பினர்கள் பாய், தலையணையுடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இரவிலும் போராட்டம் தொடர்ந்து தற்போது 16 மணி நேரத்தை கடந்து காலையிலும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சீர்காழி நகர்மன்ற சாதாரணக்கூட்டம் அதன் தலைவர் துர்கா பரமேஸ்வரி(திமுக) தலைமையில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. ஆணையர் வாசுதேவன் முன்னிலை வகித்தார். இதில், தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட 24 உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
25 மன்ற பொருள் தீர்மானங்களை நிறைவேற்றிட கூட்டத்தில் தீர்மானங்களை வாசிக்கப்பட்ட நிலையில், திமுக, தேமுதிக, மதிமுக, அதிமுக மற்றும் பாமக, சுயேச்சை உள்ளிட்ட 12 நகர்மன்ற உறுப்பனர்கள் கடந்த ஒரு ஆண்டாக உறுப்பினர்கள் கூட்டத்தில் வைத்த எந்த கோரிக்கையும் நிறைவேற்றவில்லை, டென்டர் விடப்பட்ட பணிகள் ஏதும் செய்துமுடிக்கவில்லை, நகரில் குப்பைகள் அள்ளப்படாமல் கடந்த 3 மாதத்திற்கு மேலாக மலைப்போல் குவிந்துகிடக்கிறது என குற்றம்சாட்டியும், அதனை சரிசெய்துவிட்டு கூட்டம் நடத்தவேண்டும் என கோரினர்.
ஆனால், தொடர்ந்து தீர்மானங்கள் வாசிக்கப்பட்டதால், ஆத்திமடைந்த உறுப்பினர் ஒருவர் தீர்மான நகலை கிழித்து எரிந்தார். அதன்பின்னர் 12 நகர்மன்ற உறுப்பினர்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அதன்பின்னர், மன்ற பொருள் வாசித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக நகராட்சி கூட்ட முடிவில் அறிவிக்கப்பட்டது
நடைபெற்ற கூட்டம் மற்றும் தீர்மானங்களை ரத்து செய்யவேண்டும் எனவும், ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக்கூறி தொடர்ந்து இரவு முழுவதும் நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.
தொடர்ந்து நகர்மன்ற கூட்டத்திலேயே உணவு அருந்திவிட்டு பின்னர் பாய், தலையணையை எடுத்து வரப்பட்டு நகரமன்ற உறுப்பின்கள் கூட்ட அரங்கில் படுத்து உறங்கினர்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்
தற்போது 17 மணி நேரமாக 12 நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம் முடிவுக்கு வராமல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
10-ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் சூரிய பிரபா தனது 4 – மாத கைக்குழந்தையுடன் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார். குழந்தையும் அங்கேயே கொசுக்கடியில் உறங்க வைத்து உறுப்பினர் சூரிய பிரபா கண் விழித்து போராட்டத்தை தொடர்ந்தார்.
முன்னதாக சீர்காழி நகராட்சி ஆணையர் வாசுதேவன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நகர மன்ற உறுப்பினர்களிடம் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், நடைபெற்ற கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என 12 நகர மன்ற உறுப்பினர்களும் தெரிவித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.