
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூரில் ஸ்ரீ அழகிய நாச்சியம்மன் சாமி, பெரிய கருப்பண்ணசாமி திருக்கோயில் மாசி களரி பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் திடீர் ரத்தால் ஏமாற்றத்துடன் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் திரும்பிச் சென்றனர்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ஆவியூரில் ஸ்ரீஅழகியநாச்சி அம்மன் சாமி, மற்றும் பெரிய கருப்பண்ணசாமி திருக்கோயில் மாசி களரி பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.
அதனை ஒட்டி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது இதற்காக மாவட்ட ஆட்சித் தலைவரின் அறிவுறுத்தலின் பேரில் ஆன்லைனில் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளை உரிமையாளர்கள் தங்கள் காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக விண்ணப்பித்திருந்தனர். அதில் 600 காளைகள் போட்டியில் பங்கேற்பதற்காக தேர்வு செய்யப்பட்டிருந்தன 450 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்திருந்தனர்.
இன்று காலை 8 மணியளவில் நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை முன்னிட்டு ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வந்தன. இதில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாச பெருமாள் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போட்டியில் பங்கேற்பதற்காக மதுரை, விருதுநகர் ராமநாதபுரம், தூத்துக்குடி, திண்டுக்கல், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து காளை உரிமையாளர்கள் தங்களது காளைகளை அழைத்து வந்திருந்தனர். இந்நிலையில் இந்த போட்டிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு குறைபாடுகள் காரணமாகவும்,போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை, எனக் கூறி பொதுப்பணித்துறை அனுமதி வழங்க மறுத்ததாக கூறப்படுகிறது. மேலும் காளைகள் பதிவு அனைத்தும் ஆன்லைனில் இருந்ததால் உள்ளூர் காளைகள் எதுவும் பதிவு செய்ய முடியவில்லை எனவும் இதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடயே பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் போதிய பரிசு பொருட்களும் இல்லை எனவும் கூறப்படுகிறது. நிலையில் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற இருந்த நிலையில் திடீரென போட்டிகளை ரத்து செய்து மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. ஜல்லிக்கட்டு போட்டிகள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் காளை உரிமையாளர்கள் மாடுபிடி வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தங்கள் காளை வெற்றி பெறும் என்ற மகிழ்ச்சியுடன் நீண்ட தூரம் தங்களது காளைகளை அழைத்து வந்த காளை உரிமையாளர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.