
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்குத் தடைக்கோரி ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த மனோஜ் பாண்டியன் அவசரமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.இந்த நிலையில் இபிஎஸ் தரப்பு இது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அவசர வழக்காக முறையீடு செய்ய மனோஜ் பாண்டியனுக்கு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.
நாளை மார்ச் 19 காலை 10 மணிக்கு உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி குமரேஷ் பாபு விசாரிக்கவுள்ளார்.சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்வோம் என சற்றுமுன் ஓபிஎஸ் தரப்பு அறிவித்த நிலையில் உயர் நீதிமன்றத்தில் அவசரமாக முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பிற்கான வேட்பு மனுவை இன்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார்.
இதைத் தொடர்ந்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு கட்சி நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், அதிமுக அலுவலகத்திற்குள் சென்ற பழனிசாமி, தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரிகளான பொள்ளாச்சி ஜெயராமன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரிடம் தாக்கல் செய்தார்.
வேட்புமனு பரிசீலனை 20 ஆம் தேதி நடக்கிறது. வேட்புமனுக்களை 21 ஆம் தேதி மாலை 3 மணி வரை திரும்ப பெறலாம். 26 ஆம் தேதி காலை 8 முதல் 5 வரை பொதுச்செயலா் தோ்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 27 ஆம் தேதி காலை 9 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த நிலையில் சென்னையில் அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைக் கோரி ஓபிஎஸ் தரப்பு வழக்கு தொடர்ந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
பொதுச்செயலாளர் தேர்தலுக்கு ஏற்படும் சட்டச் சிக்கலை மேற்கொள்வது குறித்து எடப்பாடி பழனிசாமி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.