
சிவகாசி ஒன்றியத்தில் ஜல்ஜீவன் மிஷன் தி்ட்டத்தின் கீழ்
13ஆயிரம் குடியிருப்பு வீடுகளுக்கு ரூ.8 கோடி மதிப்பீட்டில் குடிநீர் இணைப்புகள் கொடுக்கும் பணிகள் தீவிரம்
சிவகாசி , மார்ச் 27 ; சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் ஜல்ஜீவன் மிஷன் தி்ட்டத்தின் கீழ் 13ஆயிரம் குடியிருப்பு வீடுகளுக்கு ரூ.8 கோடி மதிப்பீட்டில் குடிநீர் இணைப்புகள் கொடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வது அரசின் முக்கிய கடமையாக உள்ளது. இவற்றில் மிக முக்கிய அடிப்படை தேவையாக இருப்பது குடிநீர். எனவே நீர் மேலாண்மைக்கு உரிய முக்கியத்துவத்தை அளித்து நீர் ஆதாரங்களை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. வரும் 2024ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இலக்குடன் ஜல் ஜீவன் மிஷன் என்கிற திட்டம் மத்திய அரசால் கடந்த 2019ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று தொடங்கப்பட்டது. மாநில அரசின் பங்களிப்புடன் நடைபெறும் இத்திட்டத்தில், மக்கள் குடி நீருக்காக அலையும் நிலையைப் போக்கி, 55 லிட்டர் வரை குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக கிராமப் பகுதிகளில் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வழங்க முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதற்கு தனி நிதி ஒதுக்கீடும் செய்யப்படுகிறது. கிராம ஊராட்சிகளில் இத்திட்டத்தை செயல்படுத்த குறைந்தபட்ச வைப்புத் தொகையை நிர்ணயம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதில் இந்தியாவிலேயே முதல் மாநிலம் தமிழகம் என்பதால் அதற்கான விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் அமைச்சர் கே.என்.நேரு பெற்றுக்கொண்டார் . ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தினை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மத்திய அரசுக்கு அவர் முன் வைத்துள்ளார். தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் உள்ள 124.93 லட்சம் வீடுகளில் இதுவரை 69.14 லட்சம் வீடுகளுக்கு (55%) குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.அதனடிப்படையில் தமிழ்நாடு மாநில உயிர் நீர் இயக்கத்தின் சார்பில் மீதமுள்ள 55.79 இலட்சம் வீடுகளுக்கு பல்வேறு கூட்டுக்குடிநீர் திட்டங்கள், ஒற்றைக் கிராமத் திட்டங்கள் மூலம் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன
விருதுநகர் மாவட்டத்தில் 2022-2023ம் நிதியாண்டில் 942 உட்கடை கிராமங்களில் ரூ.146.7 கோடியில் 2 லட்சத்து 18 ஆயிரத்து 808 குடிநீர் இணைப்புகள் வழங்குவதிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன. இதில் சிவகாசி ஒன்றியத்தில் 13ஆயிரத்து 301 குடியிருப்பு வீடுகளுக்கு ரூ.7கோடியே 88 லட்சத்து 38ஆயிரம் மதிப்பீட்டில் குடிநீர் இணைப்புகள் கொடுக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதில் பள்ளப்பட்டி ஊராட்சியில் பள்ளபட்டி, காமராஜர்காலனி, உசேன் காலனி, அண்ணாநகர், இந்திராநகர், முத்துராமலிங்கபுரம் காலனி, சாமிபுரம்காலனி, பள்ளப்பட்டி ஆகிய பகுதிகளில் 6ஆயிரத்து 106 குடியிருப்பு வீடுகளுக்கும், அனுப்பன்குளம் ஊராட்சியில் 1422 குடியிருப்பு வீடுகளுக்கும் செங்கமலநாச்சியாபுரம் ஊராட்சியில் ஸ்டேட்பேங்க்காலனி, விவேகானந்தர் காலனி, செங்கமலநாச்சியபுரத்தில் 1137 குடியிருப்பு வீடுகளுக்கும், ஆனையூர் ஊராட்சியில் காந்திநகர், கட்டளப்பட்டி கிராமங்களில் 904 குடியிருப்பு வீடுகளிலும், நாரணபுரத்தில் ஊராட்சியில் 892 குடியிருப்பு வீடுகளுக்கும், சித்துராஜபுரம் ஊராட்சியில் சரஸ்வதிபாளையம், ராமசாய்நகர் கிராமங்களில் 417 குடியிருப்பு வீடுகளிலும், வடபட்டியில் ஊராட்சியில் வடபட்டிபுதூரில் 100 குடியிருப்பு வீடுகளுக்கும், சாமிநத்தம் ஊராட்சியில் 493 குடியிருப்பு வீடுகளுக்கும், விஸ்வநத்தம் ஊராட்சி சிவகாமிபுரம் கிராமத்தில் 226 குடியிருப்பு வீடுகளுக்கும் வாடியூர் ஊராட்சியில் கல்போது கிராமத்தில் 24 குடியிருப்பு வீடுகளுக்கும், வடமலாபுரம் ஊராட்சியில் அண்ணா காலனியில் 64 குடியிருப்பு வீடுகளுக்கும் மேலாமத்தூர் ஊராட்சி சேர்வக்காரன்பட்டியில் 453 குடியிருப்பு வீடுகளுக்கும் தேவர்குளம் ஊராட்சியில் தேவர்குளம், பாரதிநகரில் 368 குடியிருப்பு வீடுகளுக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன.
சிறப்பாக செயல்படும் சிவகாசி ஒன்றியம்
சிவகாசி ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவரும் திமுக ஒன்றிய செயலாளருமான விவேகன்ராஜ் கூறும்போது, சிவகாசி ஒன்றிய கிராமங்களில் பல்வேறு நீர் ஆதாரங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. சிவகாசி ஒன்றியத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. தனிநபர் இல்ல குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதிலும் நீர் பரிசோதனை செய்வதிலும், வீடு தோறும் குடிநீர் இணைப்புகள் வழங்கி அதனை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதிலும் சிவகாசி ஒன்றியம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் ஒரு நாளில் 1 நபருக்கு 55 லிட்டர் தண்ணீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கிராமப் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கி தரமான குடிநீர் வினியோகிப்பது இத்திட்டத்தின் நோக்கம்.
போதிய குடிநீர் ஆதாரத்தை முதலில் உருவாக்க வேண்டும்.
ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர் கூறும்போது,
தற்போது சிவகாசி ஊராட்சிகளில் உள்ள நீராதாரம் மூலம் வீட்டுக் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் தற்போதுள்ள நீராதாரத்தை வைத்து அனைவருக்கும் குடிநீர் வழங்குவது இயலாத ஒன்றாகும். இதற்கு போதுமான குடிநீர் ஆதாரங்கள் ஊராட்சிகளில் இல்லை. இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த போதிய குடிநீர் ஆதாரத்தை முதலில் உருவாக்க வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் புதிதாக கட்டப்பட வேண்டும். இப்படி படிப்படியாக நீர் ஆதாரத்தையும் உருவாக்கிய பின்புதான் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்குவது சாத்தியமாகும். ஒரு ஊராட்சிக்கு தினமும் 2 லட்சம் லிட்டர் குடிநீர் தேவை என்ற நிலையில் மானுர் கூட்டுக்குடிநீர் 10 லிட்டா் குடிநீர் கூட வருவதில்லை என்று கூறினார்.