விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய போலீஸ் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
அம்பாசமுத்திரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங், சில வழக்குகள் தொடர்பாக விசாரணைக்கு அழைத்து சென்ற 30 பேரின் பற்களை பிடுங்கி கொடூரமாக தாக்கியதாக புகார் எழுந்தது. கல்லிடைகுறிச்சி இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் உள்ளிட்ட 10 போலீசார் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அறிவுறுத்தப்பட்டது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங், சில வழக்குகள் தொடர்பாக விசாரணைக்கு அழைத்து சென்ற 30 பேரின் பற்களை பிடுங்கி கொடூரமாக தாக்கியதாக புகார் எழுந்தது.
இதைத்தொடர்ந்து உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இதுதொடர்பாக விசாரணை நடத்த நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதன்படி சேரன்மகாதேவி உதவி ஆட்சியர் முகம்மது சபீர் ஆலம் பாதிக்கப்பட்டவர்களிடமும், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீசாரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் பாதிக்கப்பட்ட 3 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் 2 பேர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இந்நிலையில் இன்று கல்லிடைகுறிச்சி இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் உள்ளிட்ட 10 போலீசார் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் உள்பட 10 போலீசாரும் இன்று சேரன்மகாதேவியில் உள்ள உதவி ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி உதவி ஆட்சியர் முகம்மது சபீர் ஆலம் முன்னிலையில் விளக்கம் அளித்தனர்.
இந்த 10 போலீசாரும் சம்பவத்தன்று பணியில் இருந்தவர்கள் ஆவார்கள். இதற்கிடையே பாதிக்கப்பட்டவர்களும், அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்பினரும் உதவி போலீஸ் சூப்பிரண்டு மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.
தவறு செய்த போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தினார்கள். இந்த நிலையில் சட்டசபையில் இன்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இசக்கி சுப்பையா, வேல்முருகன் உள்ளிட்ட பல்வேறு எம்.எல்.ஏ.க்கள் இந்த பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பினார்கள்.
இச்சம்பவம் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிக்கு சட்டப்படி தண்டனை வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- இங்கு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உறுப்பினர்கள் இசக்கி சுப்பையா, வேல்முருகன், அருள், ஆளுர் சானவாஸ், நாகை மாலி உள்ளிட்டோர் தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
அம்பாசமுத்திரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு விவகாரத்தை பொறுத்தவரையில் குற்ற செயல்களில் ஈடுபட்டு விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட சிலருடைய பற்களை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு வந்த உடன் சேரன் மகாதேவி சார் ஆட்சியர் (உட்கோட்ட நடுவர்) தலைமையில் விசாரணை தொடங்கப்பட்டது. அந்த ஏ.எஸ்.பி. உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல் சம்பவங்களில் எந்தவிதமான சமரசங்களும் இந்த அரசு மேற்கொள்ளாது என்பதை இந்த சபையில் நான் ஏற்கனவே தெரிவித்து இருக்கிறேன். அந்த வகையில் இந்த விரும்பத்தகாத சம்பவத்தில் ஈடுபட்ட அம்பாசமுத்திரம் கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டு உள்ளேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன். முழுமையான விசாரணை அறிக்கை வந்தவுடன் உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதி அளிக்கிறேன். என அவர் கூறியுள்ளார்.