நிலத்திற்கு “பட்டா” என்ற வருவாய் துறை ஆவணம் தவிர அதனுடன் கீழ்க்கண்ட நான்கு ஆவணங்கள் மிக முக்கியமானவை .
அவை பட்டாவை உறுதி செய்யவும், வேறு ஏதாவது வில்லங்கங்கள் இருக்கிறதா என்று பரிசோதித்து நிலங்களை வாங்குவதற்கும் மிகவும் உதவியாக இருக்கும், மேற்படி நான்கு ஆவணங்களை பற்றியும் சரியான புரிதல் இன்று வரை பொதுமக்களுக்கு இல்லை, என்பதே உண்மை! அதனை இந்த கட்டுரை தீர்க்கும் என நினைக்கிறன்.
- சிட்டா:
“சிட்டா” என்பது கிராம நிர்வாக கணக்கு புத்தகங்களில் ஒரு பதிவேடு (கணக்கு எண் 10 ) இதில் யார் யாருக்கு எல்லாம் “பட்டா” கொடுக்கப்பட்டு இருக்கிறதோ அதனுடைய விவரங்கள் தொகுக்கப்பட்டு இருக்கிற பதிவேடு ஆகும் .
உதாரணமாக பள்ளிகூட ரேங்க் கார்டு மாணவர்களுக்கு கொடுக்கபட்டு இருக்கும், அது வெளியே சுற்றி வரும் ஆவணம் அதுபோல் பட்டாவை வைத்து கொள்ளுங்கள்.
பள்ளிகூட லெட்ஜெரில் அனைத்து மாணவர்களின் மதிப்பெண்கள் தொகுத்து ஒரு பேரேடு இருக்கும் அது போல தான் இந்த சிட்டா பதிவேடு! பட்டா வெளியில் சுற்றி வருவதால் போலி அச்சடிப்பு , நகல், கலர் ஜெராக்ஸ், மூலம் பட்டாக்களில் அளவுகள் மாற்றங்கள், பட்டாதாரர் பெயர், தந்தை பெயர் மாற்றங்கள் என நில அகபரிப்பாளர்கள் செய்ய அதிக வாய்ப்பு இருக்கிறது.
எனவே உங்கள் கைக்கு வரும் பட்டாவை கிராம கணக்கில் இருக்கும் சிட்டா பதிவேட்டில் ஒப்பிட்டு சரி பார்த்து கொள்வதற்காக சிட்டா பதிவேடு இருக்கிறது.
அதாவது வெளியில் சுற்றும் பட்டாவை சிட்டா கட்டுபடுத்துகிறது .
தற்போது பட்டா ஆன்லைனில் பார்கோடு உடன் வருவதால் பட்டாவை உறுதி செய்து கொள்ள முடியும் !
சிட்டாவும் தற்போது ஆன்லைனில் கிடைக்கிறது , கிரயபத்திரம் எப்படி ஒரிஜினலா என்று சோதிக்க EC போட்டு பார்கிறோமோ ! அதே போல் பட்டா ஒரிஜினலா என்று சோதிக்க சிட்டா வை பார்க்க வேண்டும்.
- அடங்கல்:
பலர் அடங்கலை புரிந்து கொள்வதில்லை , அடங்கல் சிட்டாவுடன் தொடர்புபடுத்தி புரிந்து கொண்டுள்ளனர். கிராம கணக்கில் அடங்கல் என்பது ஒரு பதிவேடு, (கணக்கு எண் 2) ஆகும்.
கிராமத்தில் இருக்கிற எல்லா நிலங்களுக்கு மேல் இருக்கிற பயிர்கள் , செடிகள், மரங்கள், யார் பயிரிடுகிறார்கள் ,யார் அனுபவிக்கிறார்கள் என்ற விவரங்கள் பற்றி ஆண்டு தோறும் பதிவிட்டு எழுதி வைத்து இருப்பார்கள்.
உதாரணமாக இடத்தின் பட்டா “A” என்ற நபர் பெயரில் இருக்கிறது என்று வைத்து கொள்வோம், அவர் வெளியூரில் இருக்கிறார், ஆனால் அதில் “B” என்பவர் பயிர் செய்கிறார் என்றால் அந்த ஆண்டு அடங்கலில் “B” என்ற நபருடைய பெயர் தான் இருக்கும், நிலம் வாங்கும் பொழுது அடங்கலை பார்ப்பதால் வேறு நபர் அதில் அனுபவம் கொண்டுள்ளனரா என தெரிந்து கொள்ள முடியும்.
அடங்கல் ஆவணத்தை வைத்து தான் நிலவள வங்கி , வேளாண்மை கூட்டுறவு வங்கி, மற்றும் பிற வங்கிகளில் விவசாயகடன் , விவசாய நகைகடன் , உரகடன் மற்றும் மானியங்கள் வழங்குகின்றனர்.
(பட்டாவை பார்த்து அல்ல அடங்கலை பார்த்து தான்)
அரசு புறம்போக்கு நிலங்களில் யார் பயிர் செய்தாலும் அடங்கலில் பயிர் செய்பவர் பெயர் குறித்து வருவர், எதிர்காலத்தில் புறம்போக்கு நிலங்களை அனுபவிக்கின்றதற்கு ஆவணமாக கூட அடங்கலை எடுத்து கொள்ளலாம்.
மேற்படி இடம் அரசுக்கு தேவையில்லாத பட்சத்தில் அனுபவிக்கின்ற நபருக்கு இலவச பட்டா பெற அடங்கல் உதவியாக இருக்கும்.
- அ.பதிவேடு:
அ.பதிவேடு என்பது ஒரு கிராமத்தின் முழு விஷயங்களையும் தன்மையையும் தெரிந்து கொள்ள பயன்படும் பதிவேடு ஆகும். இது கிராம கணக்கில் 1வது பதிவேடு ஆகும்.
அ.பதிவேடு ஆண்டுதோறுமோ அல்லது அடிக்கடியோ மாறக்கூடிய ஆவணம் இல்லை! அது ஒரு நீண்ட கால பதிவேடு.
பெரும்பாலும் கிராமத்தை ஒட்டு மொத்தமாக நிலஅளவை செய்து ரீசர்வே செய்தார்கள் என்றால் அப்போது மட்டுமே அ.பதிவேடு திருத்தப்படும். அல்லது மாற்றப்படும்.
இப்போது தமிழகத்தில் இருக்கிற அ.பதிவேடு 1980 முதல் 1987 வரை கிராம நிலங்களை நில அளவை செய்து புதிய சர்வே எண்கள் கொடுத்து உருவாக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை அதில் மாற்றம் இல்லை.
இப்பொழுது நீங்கள் நிலம் வாங்க போனால் 1980 முதல் 1987 வரை சர்வே செய்யபட்ட காலத்தில் நிலத்தை அனுபவித்த உரிமையாளர் பெயர், அ.பதிவேட்டில் இருக்கும்.
அதனை வைத்து தற்போதைய உரிமையாளர்க்கும் அ.பதிவேட்டில் இருக்கும் உரிமையாளருக்கும் இடையே லிங்க் ஆவணங்கள் சரியாக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளமுடியும். அதன்மூலம் நிலத்தில் பல சட்ட சிக்கல்களை தவிர்த்து விடலாம் .
அதுபோல் அ.பதிவேடு உருவாகும் காலத்திற்கு முன் அந்த இடத்திற்கு என்ன சர்வே எண் ,ஒரு நிலத்திற்கு இருந்தது என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.
எதிர்காலத்தில் சர்வே சிக்கல்கள் ஏதாவது வந்தால் அ.பதிவேட்டின் மூலம் ஓர் அளவுக்கு அதனை புரிந்து கொள்ள முடியும் அதனால் எப்போதும் இடம் வாங்கினாலும் அந்த நிலத்தினுடைய அ.பதிவேட்டின் நகலை வைத்து இருப்பது உத்தமம்.
- FMB:
FMB என்பது புலப்பட புத்தகம் ஆகும், ஒரு கிராமத்தில் உள்ள அனைத்து நிலங்களையும் சர்வே எண் வாரியாக நில அளவை துறையினரால் வரையப்பட்டு புத்தகமாக போட்டு வைத்து இருப்பார். ஓவ்வொரு பக்கத்திற்கும் ஒரு சர்வே எண்ணின் வரைபடம் போடப்பட்டு இருக்கும் .
நீங்கள் வாங்க போகும் நிலத்தின் சர்வே எண்களின் புலப்பட நகல் நிச்சயம் உங்களிடம் இருக்க வேண்டும்.
இப்படம் நீங்கள் வாங்கும் இடத்தை அளந்து பார்க்கும் பொழுதும், ஏதாவது பவுண்டரி சிக்கல்கள் பக்கத்து நிலத்து காரருடன் வந்த பொழுதும் இந்நிலத்தில் சர்வே கற்கள் இல்லை என்ற பொழுதும் இந்த FMB மிக முக்கியமாக பயன்படும்.
உதாரணமாக ஒரு நிலத்தின் சர்வே எண் 10 என்று வைத்து கொள்வோம். அதனுடைய பரப்பு 4 ஏக்கர் என்று வைத்து கொள்வோம், அதில் ஒரு ஏக்கர் வீதம் என்று நான்கு பேருக்கு இருந்தால் அது உட்பிரிவு செய்யப்பட்டு , அதற்கு 10/1, 10/2,10/3, 10/4, என்று உட்பிரிவு சர்வே எண் கொடுதிருப்பார்கள்.
அந்த நிலத்தில் 4 உரிமையாளர்களும் எப்படி பிரிந்து நிற்கிறார்களோ அதே போல் புலபடத்திலும் வரைய பட்டு இருக்கும்.
மேலும் 10/2 இல் ஒரு ஏக்கரில் வீடு மனைகள் போட்டால் ஒரு கிரவுண்டு வீதம் 15 பேருக்கு வரும். அந்த 15 பேருக்கும் பட்டா மனு செய்யும் போது சர்வேயர் மேற்படி முறையில் 10/1A1, 10/1A2, 10/1A3, 10/1A4, 10/1A5, என்று வரிசையாக 15 உட்பிரிவுகள் செய்து FMB யிலும் அதுபோல உட்பிரிவு செய்து வரைந்து இருப்பார்கள்.
நாம் விலை மதிப்புள்ள வீடு மனைகளை வாங்கும் போது நிச்சயம் நம் மனையின் படமும், சர்வே எண்ணும் புலபடத்தில் இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும்! சர்வே பிழை என்று ஒன்று இருக்கிறது .
நம்முடைய மனை அதில் உட்கார்ந்து விடக்கூடாது. வீட்டுமனைகள் வாங்கும் போது இதைப்பற்றி யாரும் பெரிய அளவு அலட்டி கொள்வது இல்லை ! கட்டடங்கள் கட்டப்படும் பொழுது தான் இவை பெரிய பிரச்சனையாக வந்து நிற்கும்,
எனவே நிலம் வாங்கும் போது FMB யையும் தாங்கள் ஒரு முக்கிய ஆவணமாக எடுத்து கொள்ள வேண்டும். மேற்கண்ட 4 ஆவணங்கள் பட்டாவிற்கு துணையாக நிற்கின்ற ஆவணங்கள் ஆகும்.