― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?கட் அண்ட் ரைட்டு கோவிந்து: எதுக்கு செங்கோலு? இந்தா பதிலு!

கட் அண்ட் ரைட்டு கோவிந்து: எதுக்கு செங்கோலு? இந்தா பதிலு!

- Advertisement -
sengol article

— ஆர். வி. ஆர்

காங்கிரஸ் கட்சில ஜெயிராம் ரமேஸ்னு இருக்கார்ல? ஊடகம், மக்கள் தொடர்புக்கு எல்லாம் அவருதான் கட்சில பொறுப்பு. அவரு ட்வீட்டு போட்டு இந்த மாதிரி சொல்லிக்கினாரு.

“தமிள் நாட்டுல இருக்கற ஒரு மத அமைப்பு, கம்பீரமான ராஜ தண்டம் ஒண்ணு செய்யச் சொல்லி, அதை நேரு கைல 1947-ம் வருசம் குடுத்துச்சு. அது உண்மைதான். ஆனா அந்த ராஜ தண்டம்றது, வெள்ளக்காரனோட ஆட்சி அதிகாரம் கைமாறி இந்தியாவுக்கு வந்ததுக்கு அடையாளமா நேரு கிட்ட குடுக்கப் போவலை. அவுங்க குட்தாங்க, நேரு வாங்கிக்கினாரு. அதான் நடந்திச்சு.”

“சரிப்பா, பாராளுமன்றத்துல செங்கோல் இருக்கட்டும். அது நல்லதுதான்”னு ரமேஸ் சொல்லவே இல்ல. கடசீல அவரு இதத்தான் கேக்க வராரு: “இப்ப எதுக்கு பளைய செங்கோலு? அந்த செங்கோல பிரதமர் எதுக்கு புதுஸா கட்டுன பாராளுமன்றத்துக்கு உள்ளார வெக்கணும்? தேவை இல்லயே?”

அல்லாத்துக்கும் பதில் இருக்கு.

புது பாராளுமன்ற பில்டிங்கை பிரதமர் டில்லில தெறந்து வெக்கறப்ப, அந்த செங்கோல டிவி-ல பாத்தீல்ல? வெள்ளில செஞ்சு தங்க முலாம் பூசுனது. அஞ்சடிக்கு லாங்கு. அதோட தலைப் பக்கம் உச்சில, நந்தி சாமி உருவம் அமைதியா கால் மடிச்சு உக்காந்துக்கிது. பிரதமர் மோடி அந்த செங்கோல கையால கும்புட்டாரு. கீள வுளுந்தும் கும்புட்டாரு. அப்பறம் உள்ளங்கை ரண்டையும் சேத்து கும்புடற மாதிரி வச்சிக்கினு, கைக்கு நடுவுல அந்த செங்கோல நேரா புட்சிகினு பவ்யமா நடந்தாரு. புது பாராளுமன்றத்துல லோக்கு சபா உள்ளார போயி, கொஞ்சம் படி ஏறி, சபாநாயக்கரு பக்கத்துல ஒரு கண்ணாடிப் பொட்டிக்குள்ள நிக்க வச்சாரு மோடி. அந்த செங்கோலுக்கு ஒரு வர்லாறு இருக்குது.

சொதந்திரம் கெடச்ச நேரத்துல, திருவாடுதுறை ஆதீனம் அனுப்பி வச்ச ரண்டு பிரதிநிதிங்க டில்லிக்குப் போனாங்க. அங்க போயி, 1947-ம் வருசம், ஆகஸ்டு மாசம், 14 ம் தேதி அன்னிக்கு சாயங்காலம், ஒரு பளைய போர்டு காரை எடுத்துக்கினு மொள்ளமா நேரு வூட்டுக்கு ஊர்கோலம் போனாங்க. காரு முன்னால நடந்த ராஜரத்தினம் பிள்ளை, அங்கங்க நின்னு ஜோரா நாகஸ்ரம் வாசிச்சாரு. அப்பறம் அல்லாரும் நேரு வூட்டுக்குள்ள போனாங்க. ஆதீனப் பிரதிநிதிங்க ரண்டு பேரும் நேரு கிட்ட போயி, அவரு மேல சாமி தீர்த்தம் தெளிச்சு, அவரு நெத்தில விபூதிய இட்டு, அவருக்கு பீதாம்பரம்னு ஒரு சால்வய போத்தி மருவாத பண்ணாங்க. அடுத்ததா, தமிள் நாட்டுலேந்து அவுங்க கொணாந்த ராஜ தண்டம் இருக்கே – அதான்பா செங்கோலு – அத எட்து நேரு கைல குட்தாங்க. நேருவும் வாங்கிக்கினாரு. வெள்ளக்காரன் கைலேந்து ஆட்சி அதிகாரத்த இந்தியாவுக்கு மாத்திவுடுற அடையாளமா அத நேரு கிட்ட குட்தாங்க.

modi sengol turn

இந்தக் கதைலாம் எனக்கு எப்பிடித் தெரியும்னு சொல்றேன். அமெரிக்காவுல இருந்து “டைம்”னு ஒரு பத்திரிகை வருதில்ல? ஆகஸ்டு 1947-ம் வருசத்துல, 14-ம் தேதி டில்லில இப்பிடிலாம் நடந்துச்சுன்னு அந்தப் பத்திரிகைல வெலாவாரியா எளுதிருக்கு. அப்பிடின்னு ஒரு படிச்ச மன்சன் எங்கிட்ட சொன்னாரு. இப்ப நீ கூட அத பாக்கலாம். அதென்னா, சைக்கிளா கூக்கிளா? கப்பூட்டரு வச்சி அதுல தேடு. உனக்கே தெரியும். (https://content.time.com/time/subscriber/article/0,33009,798062,00.html)

அந்த செங்கோலப் பத்திதான் ஜெயிராம் ரமேஸ் ட்வீட்டு விட்டாரு. சரி, நேரு கைல எதுக்கு அத குடுத்தாங்க, அவரு எதுக்கு வாங்கினாருன்னு ரமேஸ் ஒளுங்கா வெளக்கம் சொல்ல வேணாம்? உயர்ந்த மனிதன் சிவாஜி கணக்கா, ஸ்டைலா செங்கோல புடிச்சு சுத்திக்கினு நடக்கவா நேருட்ட குட்தாங்க? அறிவாளியான நேரு, எதுக்கு தராங்கன்னு தெரியாம ஏதோ பாப்பா கிப்ட் வாங்கறா மாதிரி அத வாங்கிக்கினாரா? ராஜாங்க அதிகாரம் புதுசா கைக்கு வரப் போவுது, நம்ம நாட்டு கலாசாரப்படி, அதுக்கான அடையாளம் அந்த செங்கோலு, ஒரு ராஜகுருதான் அதைக் குடுக்கற வளக்கம்னு தெரிஞ்சுதான், அந்த ஐடியாலதான், திருவாடுதுறை ஆதீனம் அதை நேருக்கு தடபுடலா மேள தாளத்தோட அனுப்பிச்சு, அவரும் அப்பிடித்தான் அத வாங்கிக்கினாரு. நாயனம் கூட கேட்டாரு.

இன்னொரு விசயம் பாரு. நேரு கிட்ட ஆதீனம் குடுத்தது ‘செப்டர்’ (sceptre) அப்பிடின்னு இங்கிலீஸ்ல சொல்றாரு ரமேஸ். செங்கோல்னு சொல்லலை. ஆனா அவரு சொன்ன வார்த்தைக்கு ஆக்ஸ்போர்டு அகராதிலயே இப்பிடித்தான் அர்த்தம் போட்டிருக்காமே?

Sceptre: அது அளகு செய்யப்பட்ட கோல். ராஜாவா இருக்கப் பட்டவரு, அதை விளா, சடங்கு மாதிரியான சமயத்துல எடுத்திட்டுப் போவாரு. அந்தக் கோல், ஒரு ராஜாவோட அதிகாரத்துக்கான அடையாளம் (a decorated rod carried by a king or queen at ceremonies as a symbol of their power).

வெள்ளக்கார மவுன்ட்பேட்டன் கிட்டேர்ந்து ஆட்சி அதிகாரம் கை மாறி, நம்ம நேருட்ட பிரதமர்னு வந்துச்சு. அப்பிடி வந்த அதிகாரத்துக்கு ஒரு அடையாளம்தான், நேரு கிட்ட திருவாடுதுறை ஆதீனம் குடுத்த செங்கோல். நாட்டுல பெரிய எதிர்க் கட்சி காங்கிரஸ்ல இருந்துக்கினு, இன்னுமா உனக்கு கொளப்பம் ரமேசு?

இந்த விசயத்துல தமிள் நாட்டு முதல் அமைச்சர் ஸ்டாலின் என்ன சொன்னாரு, தெரிமா? பாராளுமன்றத்துல செங்கோல் இருக்கணும்னு அவரு சொல்லலை, இருக்க வேணாம்னும் சொல்லலை. அந்த விசயம் பத்தி அவரு வாயத் தெறக்கல. மோடி அரசு எது நல்லது பண்ணாலும், தமிளனுக்கே பெருமை செஞ்சாலும், அதை வாள்த்தக் கூடாதுன்னு வச்சிருக்க. அதே நேரம், செங்கோல் வாணாம்னு சொல்றதுக்கும் உனக்கு கூச்சமா இருக்குது. ஏன்னா அது தமிள் நாட்டுப் பெருமைய வெளிப்படையா உதாசீனம் பண்ற மாதிரி ஆவுது. அதுனால வேற எங்கயோ பிராக்கு பாத்துக்கினு இருப்பியாக்கும்?

இப்ப, சோனியா, ராகுல், ஸ்டாலின் மூணு பேத்துக்கும் நான் சில விசயம் சொல்டா?

வள்ளுவரு செங்கோல் பத்தி ஒரு அதிகாரம் எளுதிக்கிறாரு. அதாவது பத்து நம்பர்ல குறளு, செங்கோன்மை அப்பிடின்னு. செங்கோன்மைன்னா நல்லாட்சின்னு ஆவும். அதுக்கு அடையாளம்தான் செங்கோல். ஒரு ராஜாவுக்கு செங்கோல் எவ்ளோ முக்கியம், செங்கோல் எதக் குறிக்கிது, அத்தோட மகிமை என்னான்னு அந்த அதிகாரத்துல வள்ளுவரு புட்டு புட்டு வச்சிக்கிறாரு. வள்ளுவரை சும்மா நூத்தி நுப்பது அடி செலையா நிப்பாட்டினா போறுமா? அவரு ஓகோன்னு சொன்ன செங்கோலயும் வாங்கி வச்சுக்கினு ஆட்சி பண்ணா என்னா தப்பு?

மன்னாராட்சி போயி இப்ப மக்களாட்சி. நமக்கு லோக்கு சபா, ராஜ சபா, மாநில சட்டசபைன்னு இருக்குதே, அங்க சபநாயக்கரு உக்கார்ற நாக்காலியைப் பாத்துக்கிறயா? மன்னர் மாதிரியே, கம்பீரமா சோக்கான நாக்காலிலயப் போட்டுத்தான் அவரும் உக்கார்றாரு. நாக்காலில அவரு சாயுற முதுகுப் பக்கம் இருக்குதே, அதுவே ஒரு கட்டிலை செங்குத்தா நிக்க வச்ச உசரம் இருக்கும். ராஜா மாதிரி நாக்காலி மட்டும் மக்களாட்சில வேணும், ஆனா ராஜா கவுரவமா பக்கத்துல வச்சிருந்த செங்கோல் மட்டும் எதிர்க் கட்சிங்களுக்கு கசக்குதா?

அந்தக் காலத்துல நம்ம ராஜாவுங்க எதுக்கு செங்கோல்னு வச்சிக்கினாங்க? தருமம் நெலைக்க, மக்களுக்கு நீதி நாயம் கெடைக்க, ராஜாதான் வளி பண்ணணும். அந்தப் பொறுப்புக்கு ஒரு அடையாளமா, அந்தப் பொறுப்பை அவருக்கு சதா நாபகப் படுத்த, அவரு செங்கோல் வச்சிருந்தாரு.

புதுசா ஒருத்தரு ராஜா பொறுப்பை எட்துக்க சொல்ல, ராஜகுரு கைலேந்து அந்த ராஜா செங்கோல வாங்கிப்பாரு. அதான் இதுல முக்கியம். பளைய ராஜாவோ, சண்டைல தோத்த எதிரி ராஜாவோ, அந்த செங்கோல மொதல்ல தொட்டுத் தரணும்னு இல்ல. அந்த ஆளு செத்தே போயிருக்கலாம். அதுனால, நேரு செங்கோல் வாங்கினதுக்கு முன்னால வெள்ளக்கார மவுன்ட்பேட்டனு அதை தொட்டுக் குடுத்தாரா இல்லியான்றது நமக்கு அவசியம் இல்ல.

நம்ம நாட்டுல நம்ம ஜனங்ககிட்ட உருவான பண்பாடு, கலாசாரம், அல்லாத்தயும் காங்கிரசு, திமுக, இன்னும் பல கட்சிங்க பெருசா மதிக்கிறதே இல்லை. அப்பத்தான் மைனாரிட்டி ஓட்டு வரும்னு அவுங்க கணக்கு பண்ணிக்கினாங்க. அதுவும் திமுக ஸ்டாலின கவனி. தமிள் மன்னருங்க தரும நாயம் ஆட்சில இருக்கணும்னு ஒரு அடையாளமா வச்சிருந்த செங்கோல, பாராளுமன்றத்துல வச்சா அது வேணும், அது நல்லதுன்னு பேச மாட்டாரு. ஆனா கருணாநிதி ஏதோ எளுதின பேனாக்கு அடையாளமா எம்பது கோடில சிலை வெக்கணும்னு மொனப்பா இருக்காரு. இதா பகுத்தறிவுன்ற?

புது பாராளுமன்றம் களையா அம்சமா கீது. இனிமே பாராளுமன்ற கூட்டம் அந்த பில்டிங்லதான் நடக்கப் போவுது. அப்பறம் ஏன் காங்கிரசு, திமுக-ன்னு இருவது கட்சிக்காரங்க பாராளுமன்ற தெறப்பு விளாக்கு போவலை? அவுங்க என்ன சொன்னாலும் உண்மை இதான். மத்தில இருக்கற மோடி அரசு எல்லா மாநிலத்துலயும் மக்களுக்கு ஏதாவது நல்லது பண்ணிக்கினே இருக்குது. ‘மத்திய அரசு ஊளல் பண்ணுது’ன்னு எதிர்க் கட்சிங்க பேச முடில. இதுனால, வெளில உதார் வுட்டாலும் எதிர்க் கட்சிங்க உள்ளுக்குள்ள சேமா இருக்குதுங்க. வெக்கத்துல தெறப்பு விளால மூஞ்சியக் காட்ட முடியாட்டியும், பேச்சுல வீரத்த காட்டிக்கணும். அதான அரசியலு?

Author: Advocate R. Veera Raghavan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Follow us on Social Media

19,170FansLike
387FollowersFollow
92FollowersFollow
0FollowersFollow
4,901FollowersFollow
17,300SubscribersSubscribe
Exit mobile version