- தமிழகத்தில் பிராமணர்களுக்காக விரைவில் தனிக்கட்சி
- நாடாளுமன்ற தேர்தலில் பலத்தை காட்ட முடிவு
- எஸ்.வி.சேகர் பேட்டி
தமிழகத்தில் பிராமணர்களுக்காக விரைவில் புதிய கட்சி தொடங்கப்பட இருப்பதாக பாரதீய ஜனதா கட்சி பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியது…
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஜாதிக்கும் ஏதோ ஒரு பெயரில் கட்சி உள்ளது. அரசியல் அங்கீகாரத்தைப் பெறும் போதுதான் சமுதாயத்துக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்பதை உணர்ந்து இந்தக் கட்சிகள் எல்லாம் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிராமணர்களுக்காக தமிழகத்தில் விரைவில் புதிய கட்சி தொடங்கப்பட உள்ளது. இது தொடர்பான அனைத்து வேலைகளும் முடிவடைந்து தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பெயர், கொடி எல்லாம் கிடைத்தவுடன் புதிய கட்சி குறித்த அறிவிப்பு செய்யப்படும்.
பிராமணர்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைப்பதற்காகவே இந்தப் புதிய கட்சி தொடங்கப்படுகிறது. சட்டசபையில் ஒரு பிராமணர் கூட எம்.எல்.ஏ. வாக இல்லை. பிராமணர்களின் புதிய கட்சி தொடங்கப்பட்ட பின்னர் அதில் பல்வேறு பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் இணைந்து செயல்பட உள்ளனர்.
அப்போது தான் கட்சிக்கு யார் தலைமை தாங்குவது என்பது தெரிய வரும். அதே நேரத்தில் என்னை தலைமை தாங்குவதற்கு அழைத்தால் அதற்கு நான் தயாராகவே உள்ளேன். நாடாளுமன்றத் தேர்தலில் பிராமணர்களை வேட்பாளர்களாக நிறுத்தி பலத்தைக் காட்டவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் 45 லட்சம் பிராமணர்கள் உள்ளனர். இவர்களில் அனைவருமே வசதியான வாழ்க்கையை வாழவில்லை. பிராமணர்களிலும் தினக்கூலிகள் அதிகம் இருக்கிறார்கள். இது போன்ற பிராமணர்களின் நலனுக்காகவே புதிய கட்சி தொடங்கப்படுகிறது. மேடான பகுதிகளையும், பள்ளத்தையும் சரி செய்து சமமாக்குவதே சமூக நீதியாகும். ஆனால் அது போன்ற சமூகநீதி இங்கு இல்லை. ஆந்திரா,தெலுங்கானா, கர்நாடகாவில் பிராமணர்கள் நலனுக்காக நல வாரியம் செயல்பட்டு வருகிறது. ஆனால் அது போன்று எந்த அமைப்பும் தமிழகத்தில் இல்லை.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு பிராமணர்களின் வாக்கு வங்கி என்ன? என்பதை நிரூபித்துக் காட்ட உள்ளோம். அதை வைத்து அடுத்த சட்டமன்றத் தேர்தலில் பிராமணர்கள் கட்சி கூட்டணி அமைத்து குறிப்பிட்ட தொகுதிகளில் போட்டியிடவும் திட்டமிட்டுள்ளது.
பிராமணர்கள் கட்சியில் சேர்ந்து பணியாற்றும் நேரத்தில் பிரதமர் மோடியிடம் அதுபற்றி எடுத்துச் சொல்லி விட்டே அதன் பின்னர் பாஜக.,வில் இருந்து வெளியேறுவேன். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி மோடியின் புகழை உயர்த்தி பிடித்து, கட்சியை வளர்க்க முற்படாமல் வீண் விளம்பரங்களைத்தான் செய்து கொண்டு இருக்கிறது… என்றார் எஸ்.வீ.சேகர்.