
சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமான இன்று தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தில் நடைபெற்ற குழந்தை தொழிலாளர் பிரச்சினையை மழுப்பி மூடி மறைத்து முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்லி இருக்கிறார் என்று சமூக வலைதளங்களில் வீடியோ பதிவுகளுடன் செய்திகள் உலா வருகின்றன. பாஜக மாநில தலைவர் கே அண்ணாமலை தனது சமூக தள பக்கத்தில் அவற்றில் ஒரு வீடியோவை பதிவு செய்து கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் இன்று சர்வதேச குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் என்று குறிப்பிட்டு குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு குறித்த சில தகவல்களையும் பதிவு செய்துள்ளார். . அவை..
புத்தகங்களையும், விளையாட்டு பொருட்களையும் கைகளில் ஏந்த வேண்டிய வயதில், குழந்தைகள் வறுமையின் பிடியில் சிக்கி, பல்வேறு தொழிற்கூடங்களில் பணியமர்த்தப்படுகின்றனர். உலகளாவிய அளவில், குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவதை எதிர்த்தும், குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களுக்கான மறுவாழ்வை அமைத்துக் கொடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு, குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் கொண்டாடப்படுகிறது.
குழந்தைத் தொழிலாளர்களை மீட்டெடுக்கும் நோக்கில் மத்திய அரசு முனைப்புடன் செயல்படுவதோடு, குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது. அதோடு மட்டுமின்றி, தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் (NCLP) அமைத்து, தொண்டு நிறுவனங்கள் மூலம் பல குழந்தைகளுக்கு கல்வி, உணவு, உதவித் தொகை வழங்கி அவர்களின் வாழ்வு மேம்பட அயராது செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் இந்த சீரியமுயற்சியால் தற்போது NCLP திட்டத்தின் கீழ் சுமார் 6000 சிறப்புப் பள்ளிகள் இயங்கி வருவதோடு 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் கல்வி கற்று பயனடைந்து வருகின்றனர்.
ஆனால் தமிழகத்திலோ, குழந்தைத் தொழிலாளர்களை மீட்டெடுக்க வேண்டிய தமிழக அரசே ஆவின் நிறுவனத்தில் சிறுவர்களை பணிக்கு அமர்த்துவது வேதனைக்குரிய ஒன்று. தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் 180% அதிகரித்துள்ளதாக ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. கொரோனா தொற்றுக் காலத்தில், குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்ததாக ஆய்வறிக்கை கூறும் நிலையில், தமிழகத்தில் குழந்தைத் தொழிலாளர்களே இல்லை என்று கூறும் அமைச்சர் திரு. சி பி. கணேசன் அவர்களது பேட்டி அர்த்தமற்றது.
ஒரு நாட்டின் எதிர்காலம் அங்கு பிறந்து வளர்கின்ற குழந்தைகளின் கைகளில் உள்ளது. ஒரு மனிதனுக்கு குழந்தைப் பருவம் மிகவும் முக்கியமான ஒன்று. அவன் நல்ல வழிகளில் சென்று சிறப்படைவதும், தீயவழிகளில் சென்று இழிவடைவதும், அந்த குழந்தைப் பருவமே தீர்மானிக்கும். அத்தகைய சிறப்பான குழந்தைப் பருவத்தை, குழந்தைத் தொழிலாளர் என்று அடைத்து அடிமையாக்காமல். அவர்கள் வாழ்வு மேம்பட அயராது பாடுபடுவோம். இந்தியாவின் எதிர்காலத்தைப் பாதுகாப்போம்.
அண்ணாமலை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து உள்ள வீடியோ பதிவு….