முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரைக் குறிப்பிடாமல் பொதுவாக ஊழல் முதல்வர்கள் என்று விமர்சித்த பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக.,வினர் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்று நடைபெற்ற அதிமுக., மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி தலைமையிலான அதிமுக.,வினர் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், பாஜக.,வுடன் இனி கூட்டணி வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றினர்.
இந்த நிலையில், ஒரு கட்சியின் உள்கட்சிக் கூட்டத்தில், இன்னொரு கட்சியின் தலைவரைக் குறித்து கண்டனமும் தீர்மானமும் நிறைவேற்றியிருப்பதை அரசியல் மட்டத்தில் ஆச்சரியமாகப் பார்க்கின்றனர். அதே நேரம், பாஜக.,வினர் இதை விமர்சித்து வருகின்றன.
தமிழக பாஜக.,வின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அதிமுக.வின் செயலுக்கு விமர்சனம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில்…
அ தி மு க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களை கண்டித்து தீர்மானம் இயற்றியிருப்பது ஏற்க இயலாதது, கண்டனத்திற்குரியது.ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தமிழகத்தின் அரசியல் நிலை குறித்தும், தமிழகத்தில் உள்ள ஊழல் அமைப்பு குறித்தும் விரிவாக குறிப்பிட்டிருந்த நிலையில், கடந்த காலத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளை மேற்கோள் காட்டியது எப்படி அவதூறான கருத்தாகும்? நடைபெற்ற சம்பவங்களை குறிப்பிடுவது எப்படி உள்நோக்கம் கொண்டதாக அமையும்? பேட்டியின் பொருளை உணராமல், அதிலிருந்து ஒரு சில வரிகளை மட்டுமே எடுத்து கொண்டு அவர் மீது தனி நபர் தாக்குதலில் ஈடுபடுவது தான் உள்நோக்கம் கொண்டதாக கொள்ளப்படும்.
நேர்மை, நாணயம், கட்டுப்பாடு, ஒழுக்கம் ஆகிய நன்னடைத்தைகளை ஒருங்கே பெற்றவர் திரு. அண்ணாமலை அவர்கள்.அறிவினாலோ, வயதினாலோ, அனுபவத்தினாலோ வருவது அல்ல முதிர்ச்சி. நல்ல எண்ணத்தினாலும், தெளிவான சிந்தனையாலும், நேர்மையான நடத்தையாலும் காணப்படுவதே முதிர்ச்சி. இவை அத்துனையும் கொண்டவர் எங்கள் மாநில தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள். ஆனால், அவரை முதிர்ச்சியற்றவர் என்று சொல்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நல்ல நோக்கம் கொண்ட இளம் தலைவரை உள்நோக்கம் கொண்டு பேசுவதாக சொல்வது முறையல்ல. தோழமை உணர்வோடு தீர்மானத்தை திரும்ப பெறுவது நலம்.- என்று நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
பாஜக., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் வெளியிட்ட அறிக்கையில், தே.ஜ.கூட்டணி கட்சியினுடைய ஓர் அங்கம் மற்றொரு அங்க கட்சியினுடைய தலைவரை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றி இருப்பது விந்தையிலும் விந்தை. அதிசயத்திலும் அதிசயம்!
கூட்டணிக் கட்சி என்பது வீடுகளில் ஆண் பெண் திருமணத்திற்காக சம்பந்தம் பேசுவது போன்றது அல்ல, திருமணம் பேசும்போது மூன்று தலைமுறைகள். தாய் தகப்பன் அண்ணன் தம்பி, மாமன் மச்சான் தொழில் மற்றும் குணாதிசயங்கள் படிப்பு பண வசதி என்பன எல்லாம் விரிவாக அலசி விவாதிக்கப்படும்.
ஆனால் கட்சிகளின் கூட்டணிகளில் இதைப்போல் இல்லை. வெற்றி பெறும் வாய்ப்பு, மக்கள் ஆதரவு, சட்டமன்ற பாராளுமன்றத்தில் கட்சியினுடைய எண்ணிக்கை, கட்சியின் வலிமை, இவைகளோடு ஒத்துப்போகும் தன்மை இவை களை அடிப்படையாகக் கொண்டு கூட்டணிகள் ஏற்படுகிறது.
இதில் லட்சியங்கள் சித்தாந்தங்கள் செயல்பாடுகள் தலைமை இவைகள் எல்லாம் கட்சிக்கு கட்சி மாறுபடும். இந்நிலையில் சரித்திரத்தை சுட்டிக்காட்டி பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னதை குற்றமாக எடுத்து குறை கண்டு கண்டன தீர்மானம் நிறைவேற்றுவது முதிர்ச்சியின்மையின் வெளிப்பாடு. உறவு பலப்பட வேண்டும் கூட்டணி தொடர வேண்டும் என்ற எண்ணம் அதிமுகவுக்கு இருக்குமானால் இப்படி செய்திருப்பது கூடாது. இந்த சம்பவம் ஒரு துரதஷ்டமே!
அதிமுக தலைவர்கள் இதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்று எஸ் ஆர் சேகர் கூறியுள்ளார்.