தமிழக மாநில அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக தரப்பில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். இதனை ஏற்ற நீதிபதிகள் புதன்கிழமை இன்று மதியம் 2:15க்கு விசாரிக்கும் என தெரிவித்தனர்.
முன்னதாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டார்கள் . அதனை தொடர்ந்து சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் கைது செய்து விசாரிக்க முகாந்திரம் இருப்பதால் நேற்று நள்ளிரவு அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து காரில் அழைத்துச் சென்றனர்.
அப்போது திடீரென செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், அவரை சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஆர். இளங்கோ கூறியதை அடுத்து செந்தில் பாலாஜியின் நிலை குறித்து அறியும் வகையில் ஆட்கொணர்வு மனு அவரது மனைவி மேகலா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டது. .
அந்த மனுவில், ‘செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை சரியில்லை. அவரது கைதில் சட்ட விதிகளை பின்பற்றவில்லை; கைது தொடர்பாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. இந்த கைது சட்ட விரோதமானது’ எனக்கூறி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் சுந்தர், சக்திவேல் அமர்வு, மனு தாக்கல் நடைமுறைகள் முடிந்தால் பிற்பகல் 2:15க்கு விசாரணை தொடங்கும் என தெரிவித்துள்ளனர்.