
‘உச்சநீதிமன்ற கண்காணிப்பில் உள்ள செந்தில் பாலாஜியை முதல்வர் பாதுகாப்பது ஏன்? அவருக்காக முதல்வர் ஸ்டாலின் வரம்பு மீறி செயல்படுகிறார்’ என குற்றம் சாட்டியுள்ளார் தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை இதுபற்றி தெரிவித்தது….
“உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் உள்ள செந்தில் பாலாஜியை முதல்வர் பாதுகாப்பது ஏன்? அவருக்காக முதல்வர் ஸ்டாலின் வரம்பு மீறி செயல்படுகிறார். செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த அறிவிப்பை வாபஸ் பெறுவதாக ஆளுநர் கூறவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டியுள்ளார்.
ஆளுநர் பொத்தாம் பொதுவாக நடிவடிக்கை எடுப்பதாக கூறுகின்றனர். அப்படி எனில், திமுக.,வின் அமைச்சர்கள் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். செந்தில் பாலாஜி மீது எங்களுக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இல்லை. அவர் செய்த குற்றங்களைத் தான் பாஜக., எதிர்க்கிறது” என்றார்.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலை கூறுகையில், ‘அதிமுக ஆட்சியில் விஜயபாஸ்கரை நீக்கம் செய்ய ஆளுநருக்கு பரிந்துரைத்தார் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். தற்போது அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்கிறார். இது ஆளுநர் அதிகாரத்தில் முதல்வர் ஸ்டாலினின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது. செந்தில் பாலாஜி ஊழல் செய்திருப்பதாக உச்சநீதிமன்றமே சுட்டிக்காட்டியுள்ளது’ எனக் கூறினார்.
அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், “செந்தில் பாலாஜி விவகாரத்தில், முதல்வர் ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார் என்பதை நினைவுப்படுத்துகிறோம். 2018ல் அப்போதைய எதிர்க்கட்சி தலைவர், ஒரு அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு இருப்பதால், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆளுநருக்கு கோரிக்கை வைத்தார். அன்றும், இன்றும் என்ன மாறிவிட்டது? செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்ட குற்றவாளி என்பதை திமுக.,வின் நாடகம் மாற்றாது” என்று கூறியுள்ளார்.