
செங்கோட்டை – சென்னை பொதிகை அதிவிரைவு வண்டி நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதியில் இருந்து, செங்கோட்டை – சென்னை, சென்னை – செங்கோட்டை பொதிகை அதிவிரைவு வண்டி, முழுதும் எலக்ட்ரிக் எஞ்சினில் ஓடப்போகிறது. இதுவரையில் சென்னை – மதுரை எலக்ட்ரிக் எஞ்சினிலும், மதுரை – செங்கோட்டை டீசல் எஞ்சினிலும் இயங்கி வந்தது பொதிகை. இதனால், மதுரையில் சற்று தாமதம் ஏற்பட்டது. இனி அந்தப் பிரச்னை இல்லை.
இதுவரை, வண்டி எண் 12661 – 8.55க்கு சென்னை எழும்பூரில் புறப்பட்டு, திருச்சிக்கு 2.35க்கும், மதுரைக்கு 5.20க்கும் வரும் பொதிகை எக்ஸ்பிரஸ், தென்காசிக்கு 8.15க்கு வந்து கொண்டிருந்தது.
அக்டோபர் 1ம் தேதி முதல், 12661 பொதிகை சூப்பர்பாஸ்ட் வண்டி, சென்னை எழும்பூரில் 8.40க்குப் புறப்படும். தாம்பரம் 9.10, மதுரை 4.10, விருதுநகர் 4.50, சிவகாசி 5.15, ராஜபாளையம் 5.45, தென்காசி 7.00, செங்கோட்டை 8.00 மணி என இதன் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் இருந்து தென்காசிக்கு சுமார் 10 மணி நேரத்தில் வந்துவிடலாம்.
அதுபோல், 12662 செங்கோட்டையில் இருந்து மாலை 6.30க்குப் புறப்பட்டு, தென்காசி- மாலை 6.35, மதுரை இரவு 9.35, திருச்சி – நள்ளிரவு 12.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு, சென்னை எழும்பூருக்கு காலை 6.40க்கு சென்றடைந்தது.
இனி அக்.01 முதல், பொதிகை அதிவிரைவு வண்டி எண் 12662 செங்கோட்டையில் மாலை 6.20க்குப் புறப்பட்டு, தென்காசி-6.35, ராஜபாளையம் 7.40, சிவகாசி 8.10, விருதுநகர் 8.40, மதுரை 9.30, தாம்பரம் 4.50, சென்னை எழும்பூர் 5.40 என நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
ALSO READ: பொதிகை, சிலம்பு ரயில்கள் அக்.1 முதல் மின்சார இஞ்சினில் இயக்கம்!
தற்போது சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் எட்டு மணி நேரத்துக்குள் வந்தடைகிறது. அதைவிட அதிகம் நிறுத்தங்களுடன் இயக்கப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் சுமார் பத்து மணி நேரத்தில் தென்காசியை வந்தடைகிறது என்பது தென்காசி ரயில் பயணிகளுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. அது போல் இதுவரை வந்ததில் இருந்து, சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் வந்துவிடலாம் என்பது, ராஜபாளையம் சிவகாசி வாழ் மக்களுக்கு மகிழ்ச்சியூட்டும் அம்சம் தான்!