கருத்து சுதந்திரத்திற்கு எதிராக காவல்துறையின் அத்துமீறல்.. யாதவ மகாசபை நிறுவனர் தேவநாதன் அவர்களின் அலுவலுகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த பேனர் நள்ளிரவில் அகற்றம் செய்யப் பட்டதை, வன்மையாகக் கண்டிப்பதாக, இந்து முன்னணி மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.டி. இளங்கோவன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
நேற்று நள்ளிரவிற்கு மேல் திருட்டு தனமாக தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் அவர் வைத்திருந்த பதாகையை காவல்துறை அதிகாரிகள் உதவியுடன் அரசு அதிகாரிகள் அகற்றுவது அநாகரிகமான செயல். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து காவல்துறை திமுகவினரின் ஏவல் துறையாக மாறிவிட்டது என்பது வேதனையான உண்மை.
கருணாநிதி முதல்வராக இருந்தபோது ஸ்டாலின் அவர்கள் ராஜா வீட்டு கன்றுக்குட்டியாக துள்ளி திரிந்தார். பல அநாகரிகமான செயல்களை செய்தபோதும் காவல்துறையில் கழக காக்கா கூட்டத்தால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் திமுகவினர் உயர் காவல்துறை அதிகாரிகளை கூட தங்கள் வேலைக்காரர்கள் போல டீ, சிகரெட் வாங்கி வரும் வேலைக்காரர்களாக நடத்தினார்.
இத்தகைய அராஜக போக்கால் வெறுப்படைந்த காவல்துறையில் இருந்த நேர்மையான சுயமரியாதை உள்ள அதிகாரிகள் எமெர்ஜென்சி காலத்தில் தங்கள் வெறுப்புணர்வை ஸ்டாலின் உள்பட திமுகவினர் மீது தீர்த்துக் கொண்டனர் என்ற செய்தி அப்போது வெளிவந்தது.
இன்று திமுகவுக்கு எதிராக கருத்திடுப வர்கள் மீது போடு வழக்கு என்ற முறைகேடான உத்தரவுக்கு அடிபணிந்து, எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல் நடவடிக்கை எடுக்கும் நிலையில் நிர்பந்திக்கப்படுகிறது. இது ஜனநாயக விரோதமான,கருத்துரிமைக்கு எதிரான திமுகவின் பாசிசம்.
டாக்டர் தேவநாதன் அவர்கள் வைத்திருந்த பதாகையில் கடவுள் இல்லை என்பவன் முட்டாள் என்றும்
ஆன்மிகத்தை அறியாதவன் காட்டுமிராண்டி என
பொதுவாகத் தான் வைத்திருந்தார். அது பல ஆண்டுகளாக இருந்தும் உள்ளது. அதனை நள்ளிரவில் வந்து அகற்றியது சட்டவிரோதமான செயல். தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் திமுகவினர் காவல்துறையை தவறாக நிர்பந்தப் படுத்தி காவல் துறையினரின் கண்ணியத்தை சீர்குலைக்கிறார்கள்.
காவல்துறை ஈரல் கெட்டு விட்டது என எதிர்கட்சியாக திமுக இருந்த போது அதன் தலைவர் கருணாநிதி கூறிப்பிட்டார்.
இன்று ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் ஆளும் கட்சியான திமுகவிற்கு விசுவாசம் என்ற விஷம் காவல்துறையில் பரவி அதன் ஈரல் கெட்டு, சட்டம் ஒழுங்கை கவனிக்க முடியாமல் சீரழிந்து விட்டது என்பதை கண்கூடாக காண்கிறோம். ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையாக பேசப்பட்ட கௌரவமான தமிழக காவல்துறை திமுகவின் வட்ட செயலாளர் அளவில் வேலை செய்கிறது என்று பொதுமக்கள் பேசும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
எனவே காவல்துறை தனது நிலையை உணர்ந்து இனி இதுபோன்ற அநாகரிகமான சட்ட விரோத முறைகேடான செயல்களுக்கு துணைபோகக்கூடாது என இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.