உயிர் வாங்கும் மெத்தனால்… குடித்தால் என்ன நடக்கும்?
மெத்தனால் என்றால் என்ன?
மெத்தில் ஆல்கஹால் என அழைக்கப்படும் மெத்தனால், எத்தனாலை விட அதிக நச்சுத்தன்மை கொண்டது.
எளிதில் ஆவியாகக் கூடிய, தீப்பற்றக் கூடிய, நிறமற்ற மெத்தனால் எரிபொருளாகவும் உபயோகப் படுத்தப் படுகிறது.
நீர் மற்றும் மெத்தனால் கலவை அதிக செயல்திறன் கொண்ட இயந்திரங்களில் உறைநிலையை குறைக்க பயன்படுத்தப்படுகிறது.
ஆடை தயாரிப்பு, பெயிண்ட் உற்பத்தி, பிளாஸ்டிக் உற்பத்தியில் உள்ளிட்ட தொழிற்சாலைகளில் முக்கிய மூலப் பொருளாக மெத்தனால் பயன்படுகிறது.
மை, பிசின்கள், பசைகள் மற்றும் சாயங்களை உருவாக்க உதவும் ஒரு தொழில்துறை கரைப்பானாக மெத்தனால் பயன்படுத்தப்படுகிறது. மேலும் பெட்ரோலில் கூட துணை பொருளாக மெத்தனால் கலக்கப்பட்டுள்ளது.
மெத்தனால் பயன்பாட்டிற்கு கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. உரிமம் பெற்ற தொழில் நிறுவனங்கள் மட்டுமே இவற்றை பயன்படுத்த முடியும்.
மேலும் மெத்தனாலை வாங்குவது, பயன்படுத்துவது என அனைத்தையும் கண்காணிக்க தனி அமைப்புகள் உள்ளன.
தொழிற் காரணங்களை தவிர்த்து பிற வகையான பயன்பாட்டிற்கு மெத்தனாலை பயன்படுத்துவது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.
மெத்தனால் உயிரைப் பறிப்பது எப்படி?
கள்ளச்சாராயத்திற்கும், விஷச்சாராயத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது.
மதுவை அரசு அனுமதியில்லாமல், உரிமம் இல்லாமல் காய்ச்சி குடித்தால் அது கள்ளச்சாராயம்.
அதுவே, போதைக்காக மெத்தனால் கலக்கப்படும் போது விஷ சாராயமாகி விடும். எத்தனால் எனப்படும் எத்தில் ஆல்கஹால் தான் மது வகைகளில் இருக்கக் கூடியது.
மெத்தனால் எனப்படும் மெத்தில் ஆல்கஹால் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடிய கொடிய விஷமாகும்.
தொழிற்துறையில் அதிகமாக பயன்படுத்தப்படும் மெத்தனால் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு கொடிய விஷமாகும்.
குறிப்பிட்ட அளவுக்கு மேல் இவற்றை உட்கொள்ளும் மனிதர்களின் நியூரான்களில் கலக்கும் போது உயிரிழப்புகளுக்கான வாய்ப்புகள் அதிகம் என சொல்லப்படுகிறது.
மேலும், இவை மூளையின் செல்களை அழிப்பதால் மெத்தனாலை உட்கொள்ளும் போது நிரந்தரமாக கண்பார்வை பறிபோகும் ஆபத்து உள்ளது.
கள்ளச்சாராய உற்பத்தியில் அதிக போதை ஏற்படுத்தும் நோக்கில் இவை கலக்கப்படுகிறது.
மெத்தனால் அளவு அதிகமாக கலக்கப்படும் சாராயத்தை உட்கொள்ளுவதால் கண்பார்வை பறிபோவது, கல்லீரல் பாதிப்பு உள்ளிட்ட உடல் உறுப்புகள் பாதிக்கப்படுவதுடன் அதிகபட்சமாக உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
மெத்தனால் கலக்கப்பட்ட சாராயத்தை உட்கொள்வதுடன் உணவு, நரம்பு மண்டலங்களை சீர்குலைக்கும். வயிறும், குடலும் வெந்துவிடும்.
நரம்பு மண்டலம் வழியாக மூளைக்கு விஷத்தன்மை பரவி மூளை செல்களை அழித்து கண்பார்வையையும், செவித்திறனையும் பறித்துவிடும்.
மேலும், நுரை நுரையாக வாந்தி வரும், இந்த வாந்தி நுரையீரலை சென்றடைந்து மூச்சு விடமுடியாமல் தடுத்து உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.