விடுதலைப்புலிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் யார் ஏஜெண்ட் என்பதில் முட்டிமோதும் நிலையைப் போல் தோற்றம் அளிக்கிறது, வைகோ மற்றும் சீமானின் அண்மைக் கால அடிதடிகள்!
மேலும் தன்னை தரக்குறைவாகத்தாக்கியும், ஸ்டெர்லைட் ஆலையுடன் சம்பந்தப் படுத்தி ரொம்பவே டேமேஜ் செய்வதாகவும், நியூட்ரினோ உள்ளிட்ட விவகாரங்களில் தன் போராட்டங்களைக் கொச்சைப்படுத்தி நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் மீம்ஸ் போடுகின்றனர் என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரை உசிலம்பட்டி அருகே மதிமுக.,வினர் செவ்வாய்க்கிழமை நியூட்ரினோ திட்ட எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவுக்கும் நாம் தமிழர் கட்சியினர் சிலருக்கும் மோதல் ஏற்பட்டது. இது நேற்று ஊடகங்களில் பெரிதாக விவாதிக்கப்பட்டது.
இதனிடையே நாம் தமிழர் கட்சிக்கும், மதிமுகவுக்கும் இடையே அவ்வப்போது ஏற்படும் மோதல்கள் குறித்து மதிமுக பொதுச் செயலர் வைகோ விளக்கம் அளித்தார். ஆண்டிப்பட்டியில் புதன்கிழமை இன்று செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, நேற்று நடைபெற்ற சம்பவம் குறித்தும், தாம் மனத்தளவில் சீமானால் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்பது குறித்தும், சீமானின் சர்வதேச பித்தலாட்டங்கள் குறித்தும் பேசினார்.
அவர் கூறியவை: “நியூட்ரினோ திட்ட எதிர்ப்பு பேரணியின்போது இருசக்கர வாகனங்களில் வந்த நாம் தமிழர் கட்சியினர் சிலர் என்னருகே வந்து ‘வீரவணக்கம்’ என முழக்கமிட்டனர். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நான் தமிழரல்ல எனவும் தெலுங்கர் எனவும் பிரச்சாரம் செய்து வருகிறார். பொது மேடைகளில் பெரியாரையும், அண்ணாவையும் சீமான் இழிவாகப் பேசி வருகிறார். பல ஆண்டுகளாக இவற்றையெல்லாம் நான் பொறுத்துக்கொண்டே இருந்தேன்.
8 ஆண்டுகளாக நான் பொறுமையாக இருக்கிறேன். நான் தமிழர் அல்ல என்றும், தெலுங்கன் என்றும் சீமான் கீழ்த்தரமாக பேசி வருகிறார். ஈரோடு ராமசாமி நாயக்கர் பயல் என்று கீழ்த்தரமாக பேசி வருகிறார். தெலுங்கன் என்று விமரிசித்து அரசியலில் இருந்து என்னை ஓரங்கட்டப் பார்க்கிறார் சீமான்.
அண்ணாதுரை என்ற முட்டாள் தமிழகத்தை கெடுத்துவிட்டார் என சீமான் பேசினார். அண்ணாவையும், பெரியாரையும் தாக்கிப் பேசினார். அவர்களை தாக்கிப் பேசுவது மறைமுகமாக என்னைத் தாக்குவதற்காகவே என்பதை பிறகுதான் தெரிந்து கொண்டேன்.
நியூட்ரினோ, ஸ்டெர்லைட் உள்ளிட்ட விவகாரங்களில் என்னுடைய போராட்டங்களைக் கொச்சைப்படுத்தி நாம் தமிழர் கட்சியினர் சமூக வலை தளங்களில் மீம்ஸ் போடுகின்றனர். இதனால், மக்கள் மத்தியில் என்னுடைய பெயர் கெட்டுப்போகிறது.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், சீமானை சந்திக்க வெறும் 8 நிமிடம்தான் அனுமதித்தார். புகைப்படம் எடுக்கக் கூட அனுமதிக்கவில்லை. ஆனால், பிரபாகரனுடன் வெகுகாலம் நட்பில் இருந்ததுபோல காட்டிக்கொள்கிறார் சீமான். பிரபாகரனுடன் சீமான் எடுத்ததாக உலா வரும் புகைப்படம் கிராஃபிக்ஸ் செய்யப்பட்டவை.
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இல்லை என்று கருதிக் கொண்டு, அவரோடு பழகியவர் போல பொய் கூறி வருகிறார். விடுதலைப் புலிகளின் சின்னத்தை தனது கட்சிக் கொடியில் வைத்துக் கொண்டுள்ளார். நான் ஒரு மாத காலத்துக்கும் மேல், விடுதலைப் புலிகள் இயக்க சீருடை அணிந்து கொண்டு பிரபாகரனுடன் இருந்தவன் என்று வைகோ தெரிவித்தார்.